பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பொறுத்தவரையில் முதல் இரண்டு டோஸ் எந்த வகை தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அதே வகை தடுப்பூசியே செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவ மற்றும் முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய்கள் உள்ளோருக்கு வருகிற 10ம் தேதி முதல், 'முன்னெச்சரிக்கை டோஸ்' எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது. 2-டோஸ் தடுப்பூசி செலுத்தியபின் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்த குறைந்தபட்சம் 9 முதல் 12 மாத இடைவெளி தேவைப்படும் என்று கூறப்படுகிறது
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறியதாவது, " கோவிஷீல்டை முதல் மற்றும் இரண்டாவது டோஸாகப் பெற்றவர்கள் மூன்றாவது டோஸாக கோவிஷீல்டைப் பெறுவார்கள்.
இதேபோல், முதல் இரண்டு டோஸ்களில் கோவாக்சின் பெற்றவர்கள் மூன்றாவது டோஸில் கோவாக்ஸின் பெறுவார்கள்.இந்த நடைமுறையை தான் நாங்கள் பின்பற்றப்போகிறோம். தற்போது, கொரோனாவின் மிகப்பெரிய எழுச்சியை சந்தித்து வருகிறோம். பெரும்பாலும் இதற்கு பின்னால் ஒமிக்ரான் தான் உள்ளது. அதான் உண்மை" என்றார்.
பூஸ்டர் டோஸ் குறித்து விவரங்களும், உங்களின் சான்றிதழுடன் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்கவ், " இந்தியாவில் பரவும் முக்கிய வேரியண்டாக ஒமிக்ரான் மாறியுள்ளது. அதன் பரவல் வேகத்தை குறைத்திட, பெரிய அளவிலான கூட்டங்களை தவிர்க்க வேண்டும்" என்றார்.
முன்னதாக, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், "உலகளவில் அனைத்து கண்டங்களிலும் கொரோனா பாதிப்பு பரவலான எழுச்சியை அடைந்துள்ளது. கடந்த எட்டு நாட்களில் இந்தியாவில் 6.3 மடங்குக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் 29 அன்று 0.79% ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, புதன்கிழமை நிலவரப்படி 5.03% ஆக அதிகரித்துள்ளது" என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil