கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி மருந்து உருவாக்குதல், தற்போது உலகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலாக உள்ளது. 2021ம் ஆண்டு இறுதிக்குள் 2 பில்லியன் டோஸ் மருந்துகளை தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்கு 18.1 பில்லியன் டாலர் வரை நிதியுதவி தேவைப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசிக்காக 200 க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. அதில், 15 மருந்துகள் மனிதர்களிடம் பரிசோதனைக்கும் நிலையை எட்டியுள்ளன. அடுத்த 12 -18 மாதங்களில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி மருந்து தயாராக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் சுவாமிநாதன் தெரிவித்தார் .
மருந்து கண்டுபிடிப்பதில் யார் முன்னணியில் உள்ளனர் கேள்விகளுக்கு பதிலளித்த சுவாமிநாதன், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மருந்து உலகளாவிய உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது. உரிய நிலையை எட்டியதால் முதலில் இந்த தடுப்பூசி மருந்து வெளியாகலாம் என்று தெரிவித்தார்.
“அவர்கள் 2 ஆம் கட்ட நிலைக்கு முன்னேறியுள்ளனர். பல நாடுகளில் 3 ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனையை பல நாடுகளில் நடத்த திட்டமிடுகின்றனர். ஜூலை நடுப்பகுதியில் மருத்துவப் பரிசோதனையின் 3 ஆம் கட்ட நிலையை சோதிக்க மாடர்னா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், மருந்துகள் மருத்துவப் பரிசோதனையின் முடிவுகளைப் பார்க்கும் வரை, இந்த மருந்துகளின் செயல்திறனையும், பாதுகாப்பையும் மதிப்பிட முடியாது. எனவே தடுப்பூசி மருந்து உருவாக்குதல் பல தடுப்பூசி நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும், மருந்து கண்டுபிடிப்பில் வெற்றிக்கான வாய்ப்புகள் அனைவருக்கும் பொதுவானது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது ”என்று சுவாமிநாதன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்,அஸ்ட்ராஜெனெகா ஆகியவை மருத்துவ பரிசோதனைகளின் இறுதி நிலையை அடைந்த முதல் நபராக உள்ளனர். தென்னாப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளிலும் இந்த தடுப்பூசி மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து இந்தியா மற்றும் பிற குறைந்த நடுத்தர வருமான நாடுகளுக்கு மருந்தை தயாரித்து விநியோகம் செய்வதற்காக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா 100 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil