இந்தியாவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15ம் தேதி வரும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) உறுதியளித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு முற்றிலும் சாத்தியமற்றது மட்டுமல்லாமல் நம்பத்தகுந்ததாக இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐதராபாத்தில் உள்ள பாரத் பயொடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் சோதனை மேற்கொள்ளும் பொருட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு ஐசிஎம்ஆர் இயக்குனர் பல்ராம் பார்கவ் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டில் தற்போது பொது சுகாதார அவசர நிலை நிலவுகிறது. கொரோனா தடுப்பு மருந்தை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். எனவே மருத்துவமனைகள் இந்த சோதனைகளை விரைவுமுறையில் நடத்திட வேண்டும். இந்த சோதனைகளுக்கான முன்பதிவு நடைமுறைகளை ஜூலை 7ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய மருந்துக்கான சோதனை நடைமுறைகளை விரைந்து முடித்து ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் மருந்தை, பொதுப்பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோய்த்தடுப்பாற்றல் நிபுணரும், புனேயில் உள்ள இந்திய அறிவியில் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கவுரவ பேராசிரியமான வினீதா பால் கூறியதாவது, புதிய மருந்தை மனிதர்களிடையே இன்னும் சோதனை துவங்கப்படாமல் உள்ள நிலையில், இம்மருந்தை, ஆகஸ்ட் 15ம் தேதி மக்களின் பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. அவ்வளவு சீக்கிரமாக புதிய மருந்தை சோதனை செய்ய முடியாது. அதற்கென்று பல்வேறு வழிமுறைகள் உள்ளன. நாம் தற்போது தொற்றுநோய் அவசர காலத்தில் உள்ளோம் என்பதை மறுக்கவில்லை, அதற்காக புதிய மருந்தை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது முற்றிலும் சாத்தியமற்ற நிகழ்வு ஆகும் என்று வினீதா பால் குறிப்பிட்டுள்ளார்.
பயோஎதிக்ஸ் துறையில் முன்னணி நிபுணராக விளங்கும் ஆனந்த் பான், புதிய மருந்து அறிமுகத்திற்கான காலக்கெடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்த மருந்தின் வெற்றி குறித்து ஏற்கனவே ஐசிஎம்ஆர் முடிவு செய்துவிட்டதாக என்று அவர் வினவியுள்ளார்.
கொரோனா புதிய மருந்து தற்போது மனித சோதனைக்கு முந்தைய நிகழ்வுகளில் தான் தற்போது உள்ளது. அந்த மருந்தை, ஜூலை 7ம் தேதியில் இருந்து மனிதர்களிடையே சோதனை நடத்த ஐசிஎம்ஆர் அவசரம் காட்டுவது ஏன்? புதிய மருந்து ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? மருந்து சோதனையின் முடிவுகள் வர சில காலதாமதம் ஆகலாம். அதனை நாம் இப்போதே தீர்மானித்துவிட முடியாது என்று ஆனந்த் பான், டுவிட்டரில் கேள்விகளை அடுக்கியுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் புனேயில் உள்ள தேசிய வைராலஜி மையம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்துக்கு Co-vaxine என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மருந்து, இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அமைப்பின் முதல் இரண்டு கட்ட சோதனை நிலைகளில் வெற்றி பெற்றுள்ளது.
பொதுவாக, இத்தகைய சோதனைகளுக்கு அதிக காலம் பிடிக்கும். மேலும் 3ம் கட்ட சோதனையில், தன்னார்வலர்களுக்கு இந்த மருந்து சோதனைக்காக வழங்கப்படும் அவர்களது உடலில் நோயின் தன்மை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்டவைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இந்த சோதனைகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள் பகுப்பாய்வு செய்வதோடு மட்டுமல்லாமல் சரிபார்க்கப்படும். இதன் முடிவுகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில், இந்த முடிவு, அதிகம் பேர் பார்க்கும் ஜெர்னலில் வெளியிடப்படும். அதன்பிறகே, இந்த மருந்து மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்படும்.
ஆகஸ்ட் 15 காலக்கெடு குறித்து ஐசிஎம்ஆர் விஞ்ஞானி லோகேஷ் சர்மா கூறியுள்ளதாவது, ஆகஸ்ட் 15 என்பதை காலக்கெடு என்று பொருள் கொள்ளக்கூடாது. இந்த தேதியில் புதிய மருந்தை, மருத்துவ ஆய்வு நிறுவனங்களின் உதவியோடு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே எங்களது இலக்கு. அதற்கான நடவடிக்கைகளை நாம் துவங்கிவிட்டோம். இலக்கை நிர்ணயித்து நாம் செயல்பட்டால், எந்த விவகாரத்திலும் வெற்றிவாகை சூடமுடியும். அதனடிப்படையிலேயே, நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதற்கேற்ப செயல்படவும் திட்டமிட்டுள்ளோம். மருந்து தயார் நிலையில் உள்ளது. சோதனைக்கு தயாராக உள்ளோம். இது நாம் செயலாற்றவேண்டியது மட்டுமே பாக்கி, இது மருந்துகட்டுப்பாட்டாளர் ஜெனரலின் தவிப்பட்ட விருப்பம் என்று லோகேஷ் சர்மா, குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய மருந்து சோதனை குறித்த பதிவேட்டில், காலக்கெடு குறித்து பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐசிஎம்ஆர் தரப்பில் அனுப்பியுள்ள கடிதத்திலேயே, இந்த புதிய மருந்து சோதனைக்கான டைம்லைன் 5.5 வாரங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவ சோதனை பதிவு பதிவேட்டில், புதிய மருந்துகளுக்கான சோதனைக்காலம் 1 ஆண்டு 3 மாதங்கள் என்று இருந்தநிலையில், அது கடந்த வியாழக்கிழமை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த திருத்தம் என்று சம்பந்தப்பட்ட சோதனை மையம் வினவியபோது, நாட்டில் தொற்றுநோய் அவசரகாலநிலை நிலவுவதால், இந்த நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சோதனை பதிவு அறிக்கையின்படி, மருந்து சோதனையில் இரண்டு முக்கிய நிலைகள் உள்ளன. முதல் நிலை, 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதில் குறைந்தது 28 நாட்கள் சோதனை நிகழ்த்தப்படும். இரண்டாவது நிலையிலான சோதனை, குறைந்தது 2 வாரங்களுக்கு நீடிக்கும். இந்த சோதனைக்காலத்தில் மதிப்பீடுகள் 14ம் நாள், 28வது நாள், 104 நாள் மற்றும் 194 நாள் என இரண்டு கட்ட சோதனைகளிலும் எடுக்கப்படும்.
இரண்டாம் கட்ட சோதனை முடிவுற்றதாலும், அது மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றது என்பது அர்த்தமில்லை. மீண்டும் பல்வேறு நபர்களிடம் இந்த மருந்து சோதனை செய்யப்பட வேண்டும்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மருந்துக்கு 12 நெறிமுறைக்குழுக்களில், 7 குழுக்கள் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த மருந்து சோதனை 1,125 பேரிடம் மட்டுமே நடத்தப்படுவதாக உள்ளது.
முதல்நிலை சோதனையில் உள்ள முதல்குழுவில் 125 பேருக்கு இந்த மருந்து 2 டோஸ் வீதம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குப்பிறகு அவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு ஒருவாரம் கழித்து மீ்ண்டும் இந்த மருந்து வழங்கப்பட்டுள்ளது. தரவுகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வாரியம், அடுத்த 2 குழுக்களுக்கு இன்னும் அதிக டோஸ் வழங்கவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
ஆனால் 2, 3ம் குழுக்களுக்கும் 2 டோஸ்கள் அளவிற்கே மருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த மருந்து சோதனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த 3 குழுக்களிலிருந்து பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்புத்திறனை அடிப்படையாகக்கொண்டு வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையில், புதிய மருந்து தொடர்பான சோதனைகள் அதிகளவில் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 28 நாட்கள் அடிப்படையிலான முதல்நிலை மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளின் முடிவுகளில், இந்த மருந்து பாதுகாப்பானது என்பது தெரியவந்துள்ளது. இது மனிதஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா தொற்றத கட்டுப்படுத்தும் என்று இரண்டாம் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை சோதனை, பல்வேறு வயதிற்குட்பட்ட ஆரோக்கியமான 750 பேரிடம் நிகழ்த்தப்பட்டுள்ளது. தரவுகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வாரியம், இந்த சோதனையின் முடிவுகளை பொறுத்து மேலும் எத்தனை பேரிடம் சோதனை நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.