Covid relief: Centre clears Rs 7,274 cr to 23 states as its share : உச்ச நீதிமன்றம், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கூறிய பிறகு, மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் உதவி வழங்குவதற்காக விதிமுறைகளை திருத்தியது மத்திய அரசு. இந்த திருத்தங்கள் மாநில அரசுகளே நேரடியாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதியை வழங்க வாய்ப்பினை வழங்குகிறது.
இந்த நோக்கத்திற்காக SDRF இல் மத்திய பங்கின் இரண்டாவது தவணையாக 23 மாநிலங்களுக்கு ரூ .7,400 கோடிக்கு மேல் விடுவிக்க ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவு செப்டம்பர் 25 அன்று வெளியிடப்பட்டது.
கோவிட் -19 காரணமாக உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு மாநில பேரிடர் நிதியத்தின் (எஸ்டிஆர்எஃப்) கீழ் இழப்பீட்டினை வழங்க விதிமுறைகளை திருத்தி இந்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) 11.09.2021 அன்று வழங்கிய வழிகாட்டுதல்களை மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு இணங்க செயல்படுத்தும் வகையில் SDRF நெறிமுறைகளில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று மத்திய உள்த்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெறிமுறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தம், மாநில அரசுகளை அதன் மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் போதுமான நிதியை வைத்திருக்க உதவும். இந்த மேலாண்மை நிதியில் மத்திய அரசு தன்னுடைய பங்கின் இரண்டாவது தவணை ரூ. 7274.40 கோடியை முன்கூட்டியே 23 மாநிலங்களுக்கு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூ. 1599.20 கோடி நிதி ஏற்கனவே 5 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
21-22 நிதியாண்டில் மாநில பங்குகள் உட்பட மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் ரூ. 23,186.40 கோடி இருக்கும். கோவிட் -19 காரணமாக இறந்தவர்களின் அடுத்த உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான செலவுகள் மற்றும் பிற அறிவிக்கப்பட்ட பேரிடர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அவர்களின் எஸ்டிஆர்எஃப்-ல் இருக்கும் தொகைக்கு கூடுதலாக தற்போது நிதி இருக்கும் என்று அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 22ம் தேதி அன்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்த பதிலில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு மாநில அரசுகள் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஏற்படும் இறப்புகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது. மாநிலங்கள் தங்கள் பேரிடர் நிதியில் இருந்து நிதியைப் பெற்று மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் அல்லது மாநில நிர்வாகத்திடம் அனுப்பும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் அறிவித்த பதிலில் கூறியுள்ளது. இறந்தவர்களின் உறவினர்களில் கோரிக்கைகளை ஏற்று இந்த நிதியை வழங்க வேண்டும் என்றும் 30 நாட்களுக்குள் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு மத்திய அரசு அளித்த பதிலில் இது குறிப்பிடப்பட்டிருந்தது. ஒவ்வொரு இறப்பிற்கும் ரூ. 4 லட்சம் என்று கொடுத்தால் பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருக்கும் நிதி வறண்டு போகும் என்றும் உச்ச நீதிமன்றம் தன்னுடைய பதிலில் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும் கோவிட் தொற்றினால் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஆனால் எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசே தீர்மானிக்கலாம் என்றும் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய பேரிடர் மேலாண்மை உருவாக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil