மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் தற்போது பல்வேறு மாநிலங்கள் நாளை கொரோனா தடுப்பூசி போடப்படாது என அடுத்தடுத்து அறிவித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணங்களாக தடுப்பூசி தட்டுப்பாடு, 18-45 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போட ஆரம்பிப்பதற்கு முன் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் போன்றவை கூறப்படுகின்றன.
மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில் “ 18 வயது முதல் 44 வயது வரையிலான பிரிவினருக்கு மே 1-ம் தேதி தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்க முடியாது. தற்போது கையிருப்பில் குறைவான அளவே தடுப்பூசி இருப்பதால், அது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தேவைப்படுகிறது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் உற்பத்தி நிறுவனங்களை தொடர்புகொண்டபோது, மருந்துகள் கிடைக்காது என்பது தெரியவந்தது. இதனால் மே 1 ஆம் தேதி 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி திட்டமிட்டபடி தொடங்காது. எனினும் மே 3-ம் தேதிக்குள் தடுப்பூசி கிடைத்துவிடும் என நம்புகிறோம். மக்கள் பொறுமை காக்க வேண்டும், பதற்றம் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு கொள்ள கோவின் செயலியில் முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்தது. புதன்கிழமை நள்ளிரவு வரை 1.33 கோடி புதிய உள்நுழைவுகள் இருந்தன. இந்த மாத தொடக்கத்தில், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (கோவிஷீல்ட்) மற்றும் பாரத் பயோடெக் (கோவாக்சின்) தங்களது உற்பத்தியில் 50 சதவீதத்தை நேரடியாக மாநிலங்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விற்க அனுமதித்தது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள தகுதியானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்காக தடுப்பூசி மையங்களுக்கு உடனே செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை 6-8 வாரங்களுக்குள்ளும் கோவாக்சின் தடுப்பூசியை 4-6 வாரங்களுக்குள்ளும் போட்டுக்கொள்ளலாம்.இரண்டாவது டோஸ் எடுப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்த பின்னரே முதல் டோஸ்க்கான ஆன்லைன் முன்பதிவுக்கு அனுமதிக்கப்படும் என தெரிவித்தார்.
டெல்லி, பஞ்சாப், மகாராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவது நாளை தொடங்க முடியாது என தெரிவித்துள்ளன.
மகாராஷ்ட்ரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஸ் டோப் கூறுகையில், சீரம் நிறுவனம் 3 லட்சம் டோஸ்கள் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இவ்வளவு சிறிய அளவை வைத்து அவ்வளவு பேருக்கும் தடுப்பூசி செலுத்த முடியாது. 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்துவதற்கு 25 முதல் 30 லட்சம் டோஸ்கள் தேவை. தேவையான தடுப்பூசி இருப்பு கிடைத்தவுடன் திட்டம் தொடங்கப்படும். திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள குழு அடுத்த கட்ட தடுப்பூசி எப்போது போடப்படும் என்பது குறித்து முடிவெடுக்கும். அடுத்த கட்ட தடுப்பூசியில் 35-45 வயது நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், டெல்லியில் தற்போது கொரோனா தடுப்பூசிகள் இல்லை. தடுப்பூசி நிறுவனங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நிறுவனங்களிலிருந்து எவ்வளவு டோஸ்கள், எப்போது கிடைக்கும் என்கிற தகவல் இதுவரை இல்லை. கொரோனா தடுப்பூசிகள் வந்தவுடன், அதுபற்றி நாங்கள் முறையான அறிவிப்புகளை வெளியிடுவோம்.
பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில் போதுமான அளவு தடுப்பூசி இல்லாததால் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த முடியாது. 2 கோடி கோவிஷீல்டு மற்றும் 50 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. மே 15ஆம் தேதிக்குள் அதில் பாதி எண்ணிக்கையாவது கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தடுப்பூசிகள் வந்தவுடன் 15 நாட்களுக்குள் அடுத்த கட்டமாக 18 வயது மேற்பட்டவர்களுக்கு போடப்படும் என கூறினார்.
பஞ்சாபிலும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது நிச்சயமற்ற ஒன்றாகவே உள்ளது. மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஹுசன் லால் கூறுகையில், மாநில அரசுகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ .600 என்று அதிகளவில் இருந்ததால் கோவாக்சின் ஆர்டருக்கான பாரத் பயோடெக் நிறுவனத்தை தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் தற்போது மாநிலங்களுக்கு ஒரு டோஸுக்கு ரூ .400 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனவே இப்போது அதைக் கருத்தில் கொள்வோம். தடுப்பூசிகள் வாங்குவது குறித்து எந்த முடிவும் இறுதி செய்யப்படாததால், 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த காலதாமதம் ஆகலாம் என கூறியுள்ளார்.
இதனால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் மே 1-ம் தேதி பல்வேறு மாநிலங்களில் தொடங்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”