உலக சுகாதார நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசி அங்கீகரிக்கப்படாததால், வெளிநாடு செல்ல அனுமதி பெறுவதில் மக்கள் சிரமப்படுகின்றனர் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முழுமையாக கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கு மீண்டும் கோவிஷீல்டு தடுப்பூசி போடுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு மக்களின் உயிருடன் விளையாட முடியாது என்று வெள்ளிக்கிழமை கூறியது.
உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.வி.நாகரத்னா அடங்கிய 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, “மீண்டும் தடுப்பூசி போட மத்திய அரசுக்கு உத்தரவிட்டு நாங்கள் மக்களின் உயிருடன் விளையாட முடியாது. எங்களிடம் எந்த தரவுகளும் இல்லை. பாரத் பயோடெக் உலக சுகாதார நிறுவனத்திடம் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ளதாக செய்தித்தாள்களில் படித்துள்ளோம். உலக சுகாதார நிறுவனத்தின் பதிலுக்காக காத்திருப்போம். தீபாவளி விடுமுறைக்குப் பிறகு இந்த விஷயத்தை நாங்கள் கையாள்வோம்.” என்று கூறினார்கள்.
இந்த வழக்கில் நேரில் ஆஜரான வழக்கறிஞர் கார்திக் சேத், கோவாக்சின் தடுப்பூசி உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்படாததால், ஒவ்வொரு நாளும் வெளிநாடு செல்ல விரும்பும் பலர் மற்ற நாடுகளில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாக வாதிட்டார். தற்போதைய நடைமுறையின் கீழ், ஏற்கனவே கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவர், கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு கோவின் இணையதளத்தில் தன்னைப் பதிவு செய்ய முடியாது. மேலும், இது தொடர்பாக இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“எந்தத் தரவுகளும் இல்லாமல் மற்றொரு தடுப்பூசியை போடுவதற்கான உத்தரவை எங்களால் பிறப்பிக்க முடியாது. உங்கள் கவலையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் உலக சுகாதார நிறுவனத்தி பதிலுக்காக காத்திருப்போம்” என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.
வெளிநாட்டில் படிக்க விரும்பும் பல மாணவர்கள் பல நாடுகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்பதால், தனது மனு முற்றிலும் ஒரு பொது நல வழக்கு என்று கார்திக் சேத் குறிப்பிட்டார்.
கோவாக்சினை வெளியிடும் போது, உலக சுகாதார நிறுவனம் அதை அங்கீகரிக்கவில்லை என்பதை அரசாங்கம் மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்று வழக்கறிஞர் கார்திக் சேத் மனுவில் கூறப்பட்டுள்ளது. உள்நாட்டு தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக் ஏப்ரல் 2021 இல் ஒப்புதலுக்காக தனது விண்ணப்பத்தை சமர்ப்பித்ததாக கூறியது. அதன்பிறகு, மே மாதத்தில், பல நாடுகளில் பட்டியலிடப்பட்ட தடுப்பூசிகளைத் தவிர வேறு தடுப்பூசிகள் போடப்பட்டவர்களை நுழைய அனுமதிப்பதில்லை என்பதை மக்கள் தெரிந்து கொண்டனர்.
சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டு, உத்தியோகபூர்வ தரவு மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதில் தாமதத்திற்கான காரணங்கள் ஆகியவற்றை வெளியிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. கோவாக்ஸினுக்கு ஆதரவாக ஒப்புதல் பெறுவதற்காக உலக சுகாதார நிறுவனத்துக்கு உண்மையான தரவு மற்றும் பதிவுகளை வெளியிடுவதற்கான வழிகாட்டுதலையும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”