சத்தீஸ்கரின் காங்கேர் மாவட்டம் கோடகானில் உள்ள ஒரு அரசுப் பள்ளி மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான விடுதிக்கு முதன் முதலாக பசுவின் சாணத்தில் இருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. ‘கோதன் நியாய யோஜனா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
காங்கேர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா கூறுகையில், “கோடகானில் உள்ள எஸ்.யு.எம் பள்ளி மற்றும் கோட்டாராவில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கான விடுதிக்கு இந்தப் புதிய பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. “இந்த பெயிண்ட் பெண்கள் சுயஉதவிக் குழுவினரால் சரதுனாவாகனில் உள்ள கால்நடை காப்பகத்தில் தயாரிக்கப்பட்டது. சத்தீஸ்கர் அரசின் லட்சிய திட்டமான மகாத்மா காந்தி கிராமப்புற தொழில் பூங்கா (RIPA) திட்டத்தின் கீழ் பெயிண்ட் தயாரிப்பதற்கான யூனிட் கட்டப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
இந்த யூனிட்டில் தற்போது 20 பெண்கள் பணிபுரிகின்றனர். நாள் ஒன்றிக்கு குறைந்தபட்சம் 500 லிட்டர் பெயிண்ட் தயாரிக்கப்படுகிறது. பெயின்ட் உற்பத்தியைப் பொறுத்து, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுக் கட்டடங்களுக்கும் எதிர்காலத்தில் “கோபர் பெயின்ட்” மூலம் வர்ணம் பூசப்படும் என்று ஆட்சியர் கூறினார்.
பெண்கள் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த ஜாகேஸ்வரி பாஸ்கர் (45) தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், பெயிண்ட் தயாரிப்பதன் மூலம் தனது மாத சம்பளம் ரூ. 3,000லிருந்து ரூ.5,000 ஆக உயரும் என மகிழ்ச்சி தெரிவித்தார்.
தினமும் 15 கிலோமீட்டர் தூரம் சரதுனவாகானில் உள்ள யூனிட்டிற்கு பயணிக்கும் கெர்கேடா கிராமத்தில் வசிக்கும் பாஸ்கர் கூறுகையில், “இந்த முயற்சி மூலம் அதிக லாபம் பெற முடியும் என நாங்கள் நம்புகிறோம் நான் மாதம் ரூ.3,000 சம்பாதிக்கிறேன். ஆனால் இந்த பெயிண்ட் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் ரூ.5,000 வரை சம்பாதிக்கலாம். கிராம மக்களும் எங்களிடம் பசு சாணத்தை விற்று பணம் பெறுகின்றனர்” என்றார்.
தற்போது, காங்கேர் மற்றும் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் பெயிண்ட் தயாரிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களிலும் யூனிட் அமைத்து தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஒரு லிட்டர் பெயிண்ட் ரூ. 125க்கு விற்கப்படுகிறது என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், அரசு கட்டடங்களுக்கு பசுவின் சாணத்தில் தயாரிக்கப்பட்ட பெயிண்ட் மட்டுமே கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்த வார தொடக்கத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் உத்தரவிட்டார். இதனால் பெயிண்ட்டின் தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும், உத்தரவை மீறினால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாகேல் எச்சரித்துள்ளார். கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோதன் நியாய யோஜனா திட்டத்தின் கீழ், ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி மண்புழு உரம், சூப்பர் கம்போஸ்ட் மற்றும் பிற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
முதல்வரின் இந்த முயற்சியை பா.ஜ,க தலைவரும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவரது தனது ட்விட்டர் பக்கத்தில், :பாகேலின் முயற்சி பாராட்டுக்குரியது மற்றும் வரவேற்கத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சராக இந்த திட்டத்தை தொடங்கினேன். இயற்கை வண்ணப்பூச்சு பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பது மட்டுமின்றி, விவசாயிகளும் பயன்பெறுவர்” என்று பதிவிட்டுள்ளார்.
நிதின் கட்கரியின் ட்விட்டிற்கு பாகேல் நன்றி தெரிவித்து, அவரை “கர்மயோகி” என்று கூறினார். மேலும், “பசு மற்றும் உழைப்பாளிகளுக்கு மரியாதை செலுத்துவது காந்தி காட்டிய பாதை. அந்த பாதையில் பயணித்து நாங்கள் முன்னேறி வருகிறோம் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“