CPI, TMC, Faced with the risk of losing their national party status: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் அதனுடைய தேசியக் கட்சிகள் என்ற அந்தஸ்தை இழக்கும் அபாயத்தை சந்தித்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பிறகு வரை அந்த கட்சிகள் மீதான மறு ஆய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளன.
மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, அந்த கட்சிகளுடைய தேசிய கட்சி என்ற அந்தஸ்தை ஏன் திரும்ப பெறக்கூடாது என்று விளக்கம் கேட்டு ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலளிக்க அக்கட்சிகளுக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதிவரை கால அவகாசம் அளித்தது.
தேர்தல் ஆணையம் நிர்ணயித்த அளவுகோல்களின்படி, ஒரு தேசியக் கட்சி குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களிலிருந்து தலா 6 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும், அல்லது, குறைந்தபட்சம் 3 மாநிலங்களிலிருந்து மக்களவையில் மொத்த இடங்களில் 2 சதவீதமாக பெற்றிருக்க வேண்டும் அல்லது, குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நிபந்தனைகளைக் குறிப்பிடுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இந்த நிபந்தனைகள் எதையும் பூர்த்திசெய்யவில்லை.
தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுகு பதிலளித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், 2016 ஆம் ஆண்டு மட்டுமே தேசியக் கட்சி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது. எனவே, 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரை அதைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் தங்களுடைய தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்து நின்றன. ஆனால், அந்த நேரத்தில் தேர்தல் ஆணையம் ஒரு மென்மையான பார்வையுடன், இரண்டு தேர்தல் சுழற்சிக்குப் பிறகு அவர்களுடைய தேசியக் கட்சி அந்தஸ்து குறித்து மறு ஆய்வு செய்ய ஒப்புக்கொண்டது. ஒரு தேர்தலுக்குப் பதிலாக இரண்டு தேர்தல் சுழற்சிகளுக்குப் பிறகு தேசிய கட்சி அந்தஸ்து நிலையை மறு ஆய்வு செய்வதற்கான தேர்தல் ஆணையத்தின் முடிவு தெளிவாக உள்ளது என்று திரிணாமுல் காங்கிரஸ் வாதிட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2024 க்குப் பிறகு அதன் தேசியக் கட்சி நிலையை மறுபரிசீலனை செய்யுமாறு தேர்தல் ஆணையத்தை கோரியுள்ளது. அத்துடன், அதன் தேசிய தன்மையைக் காக்க கட்சியின் வரலாற்றை மேற்கோள் காட்டியுள்ளது. “நாங்கள் இந்த நாட்டின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும், மேலும், சுதந்திர போராட்டத்தில் கூட பங்கேற்றுள்ளோம். நாங்கள் தொடர்ந்து ஒரு தேசிய இருப்பைக் கொண்டிருக்கிறோம். இந்த பதிலை நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளோம், இப்போது அவர்கள் அதைக் கருத்தில் கொள்வார்கள் ”என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
அவர்கள் அதை அங்கீகரிக்காவிட்டால், பாஜக, காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் அரசியல் கட்சிகளாக இருக்கும்.
1968 ஆம் ஆண்டு சின்னங்கள் சட்டப்படி, ஒரு கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தால், நாடு முழுவதும் அது ஒரு பொதுவான சின்னத்தைப் பயன்படுத்தி தேர்தல்களில் போட்டியிட உரிமை இல்லை. இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த முடிவு செயல்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் போட்டியிடும் தேசியவாதக் கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் அனலாக் கடிகார சின்னம் ஒதுக்கப்படாது. அதன் சின்னத்தை ஒரு மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட மாநிலங்களில் மட்டுமே அதை பயன்படுத்த முடியும்.