கண்ணூரில் 2005-ஆம் ஆண்டு பா.ஜ.க பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் செய்தித் தொடர்பாளரின் சகோதரர் உட்பட 8 சி.பி.ஐ.(எம்) தொண்டர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கண்ணூரில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் பிறப்பித்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: For hacking to death BJP worker in 2005, eight CPI(M) men get life term, including brother of Pinarayi’s press secretary
இந்த வழக்கில் மற்றொரு சி.பி.ஐ.(எம்) தொண்டருக்கு மூன்றாண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி கண்ணூர் முழப்பிலங்காடு கிராமத்தில் இளம்பிள்ளை சூரஜ் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் 9 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
2012 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கிளர்ச்சித் தலைவர் டி.பி. சந்திரசேகரன் கொலை வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் டி.கே ராஜீஷ் மற்றும் பினராய் விஜயனின் செய்தித் தொடர்பாளர் பி.எம் மனோஜின் சகோதரர் ஆகியோரும் ஆயுள் தண்டனை பெற்றவர்களில் அடங்குவர்.
சி.பி.ஐ(எம்) இன் முன்னாள் உள்ளூர் செயலாளரும், எடக்காடு பஞ்சாயத்து முன்னாள் தலைவருமான பிரபாகரன் மாஸ்டர் மற்றும் இரண்டு சி.பி.ஐ.(எம்) உள்ளூர் கமிட்டி உறுப்பினர்களான கே.வி. பத்மநாபன் மற்றும் மனோம்பேத் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மற்ற முக்கிய பிரமுகர்கள் ஆவர்.
கடந்த 2003-ஆம் ஆண்டு சி.பி.ஐ.(எம்) கட்சியில் இருந்து விலகிய சூரஜ், தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக் கொண்டதால், தண்டனை பெற்றவர்கள் அனைவரும் அவர் மீது பகைமையை வளர்த்துக் கொண்டதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
கொலை செய்யப்படுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பாக, சூரஜ் மீது ஏற்கனவே கொலை முயற்சி நடத்தப்பட்டது. இதில், அவர் காயங்களுடன் உயிர் தப்பினார். இதில், சி.பி.ஐ.(எம்) கட்சியின் உள்ளூர் தலைவர்களான பிரபாகரன், பத்மநாபன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் குற்றம்சாட்டப்பட்டனர்.
முதன்முதலாக தாக்குதல் நடத்தப்பட்டதிலேயே சூரஜ் கடும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர், அவர் தனது அன்றாட வாழ்க்கையை தொடங்கிய உடன், அடுத்த தாக்குதல் நடத்தப்பட்டது. குற்றப்பத்திரிகையின்படி, ஆகஸ்ட் 5, 2005 அன்று ஆட்டோவில் வந்த நபர்கள் அனைவரும் சூரஜை கடுமையாக தாக்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணை 2010-ம் ஆண்டு தொடங்கிய போதும், அது முன்னேற்றம் அடையவில்லை. 2012 ஆம் ஆண்டு சி.பி.ஐ.(எம்)-ல் இருந்து விலகி கிளர்ச்சி அமைப்பை உருவாக்கிய டி.பி. சந்திரசேகரன் கொலையில் சி.பி.ஐ.(எம்) ஆதரவு கும்பல் தலைவரான டி.கே ராஜீஷ் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
சூரஜ் கொலை உட்பட மற்ற அரசியல் கொலைகளில் தனக்கு தொடர்பு இருப்பதாக ராஜீஷ் ஒப்புக்கொண்டார். சந்திரசேகரன் கொலை செய்யப்படும் வரை கண்ணூரில் நடந்த அரசியல் கொலைகளில் ராஜீஷின் பங்கு வெளியே வரவில்லை. இந்த தகவல் வெளியானதை அடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சூரஜ் கொலையை போலீசார் மீண்டும் விசாரித்தனர்.
அரசு தரப்பு 12 பேரை குற்றம் சாட்டியுள்ளது. அவர்களில் இருவர் விசாரணையின் போது இறந்தனர், ஒருவர் விடுவிக்கப்பட்டார்.
- Shaju Philip