கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கு எதிராக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஆதரவாக பாஜகவும் போராட்ட களத்தில் குதித்துள்ளன.
கேரளத்தில் ஆளுநருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுக்கும் இடையே பனிப்போர் தொடர்கிறது. இந்நிலையில், நவம்பர் 15ஆம் தேதி ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும், அன்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவர்மனர் மாளிகை நோக்கி பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 18 மற்றும் 19ஆம் தேதிகளில் மிகப்பெரிய போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, திருவனந்தபுரத்தில் இரண்டு நாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, கட்சியின் மாநிலச் செயலாளரும், பொலிட்பீரோ உறுப்பினருமான எம்.வி.கோவிந்தன் ஞாயிற்றுக்கிழமை (நவ.6) செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ராஜ்பவன் நோக்கி நடைபயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக கல்வித் துறையைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பார்கள்.
இந்த அணிவகுப்பும் அதைத் தொடர்ந்து நடைபெறும் தர்ணாவும் கல்விப் பாதுகாப்பு சமிதியின் கீழ், டாக்டர் பி எக்பால் (முன்னாள் துணைவேந்தர்) தலைமையில் நடைபெறும்.
அன்றைய தினம், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள், பேரணிகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படும். ஆளுநருக்குப் பின்னால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக உள்ளது.
இந்த அச்சுறுத்தலை மக்களை திரட்டி எதிர்கொள்வோம்.
மேலும், கேரளாவில் உள்ள பல்கலைகழகங்களின் வேந்தராக கவர்னரை தொடர அனுமதிக்கலாமா என்று யோசிக்க வேண்டிய நிலைக்கு விஷயங்கள் வந்துள்ளன.
தற்போதுள்ள சூழலில் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், அரசியல் சாசன ரீதியாகவும் அனைத்து நிலைகளிலும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.
திருச்சி சிவா பங்கேற்கிறார்
நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் ராஜ்பவன் நடைபயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தொடங்கி வைக்கிறார்.
மூத்த தலைவர்களும், திமுக ராஜ்யசபா உறுப்பினர் திருச்சி சிவாவும் பங்கேற்கின்றனர். ராஜ்பவன் அணிவகுப்புக்கு செல்லும் நாட்களில், இப்பிரச்னை குறித்து, சி.பி.ஐ.(எம்) வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யும்.
இதனை மார்க்சிஸ்ட் மாநிலத் தலைவரும் உறுதிப்படுத்தினார். இதற்கிடையில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக போராட்டங்களை அறிவித்துள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சி அமைதி காக்கிறது. அக்கட்சியால் காங்கிரஸ் அறிவித்துள்ள போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேநேரம், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil