ஜோஷிமத் நகரில் நிலச்சரிவு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நேரத்தில், அங்கிருந்து 82 கிமீ தொலைவில் உள்ள கர்ணபிரயாக்கில் உள்ள சாலைகளில் விரிசல் மற்றும் வீடுகளின் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டுள்ளது, ஆனால் விஷயம் பெரும்பாலும் வெளியில் வரவில்லை.
ஜோஷிமத்தில் இருந்து 82 கிமீ தொலைவில் உள்ள கர்ணபிரயாக்கில் உள்ள பகுகுணா காலனியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது, இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு தோன்றத் தொடங்கியது. பிளவுகள் மற்றும் விரிசல்கள் இப்போது அகலமாகவும் நீளமாகவும் இருப்பதால் பல வீடுகள் வசிக்கத் தகுதியற்றவையாகி, உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சொந்தமாக மாற்று இடம் கிடைக்காத மற்றவர்கள் மாநகர சபையின் தங்குமிடங்களில் இரவு பகலை கழிக்கின்றனர்.
இதையும் படியுங்கள்: ‘ரூ.1 கோடி தருகிறேன், என் மகளையும் பேரனையும் மீட்க முடியுமா?’: பெங்களூரு மெட்ரோ விபத்தில் பலியானவரின் தந்தை
துலா தேவி பிஷ்ட் தனது வீடு 2010 இல் கட்டப்பட்டதாகவும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அருகில் ஒரு ‘மண்டி’ (சந்தை) வந்த பிறகு, சுவர்களில் விரிசல் தோன்ற ஆரம்பித்ததாகவும் கூறினார். “2013 க்கு முன்பு எல்லாம் நன்றாக இருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் விரிசல்களை கண்டுக்கொள்ளவில்லை, ஆனால் பெரும்பாலான அறைகள் இப்போது தங்குவதற்கு மிகவும் ஆபத்தானவை,” என்று அவர் கூறினார். அவரது வீட்டின் பெரும்பாலான சுவர்களில் பிளவுகள் மற்றும் விரிசல்கள் உள்ளன, மேலும் சில மாதங்களுக்குள் அவை மீண்டும் தோன்றியதால் இடைவெளிகளை நிரப்புவதற்கான அனைத்து முயற்சிகளும் பயனற்றவையாக மாறியது.
அவரது வீட்டிற்கு அருகில் கமலா ரதுரி வசிக்கிறார், அவர் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். “இந்த வீடு 2000 இல் கட்டப்பட்டது, அதில் ஆறு அறைகள் உள்ளன. வாடகைக்கு இருந்தவர்கள் கடந்த ஆண்டு நான்கு அறைகளை காலி செய்தனர், இரண்டு மாதங்களுக்கு முன்பு நாங்கள் இரண்டு அறைகளிலிருந்து வெளியேறினோம், விரிசல்கள் புறக்கணிக்க முடியாத அளவுக்கு அகலமாகிவிட்டன. இப்பகுதியில் உள்ள மற்ற அனைத்து வீடுகளையும் போல், 2013ல் விரிசல் ஏற்பட துவங்கியது. கடந்த ஆண்டு அக்டோபர் – நவம்பரில், திடீரென சுவர் மற்றும் தரை விரிசல் விரிவடைந்து, மேற்கூரை சாய்ந்து கதவுகள் சிக்கின. அப்போது, வாடகைதாரர்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். யார் செல்ல மாட்டார்கள்?” என்றார் ரதுரி.
அருகில் உள்ள ஹரேந்திர சிங்கின் வீடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் ஏற்கனவே கட்டிடத்தை விட்டு வெளியேறிவிட்டனர் மற்றும் அறைகள் திறந்த நிலையில் இன்னும் பல உடமைகள் உள்ளன. அறையின் ஒரு சுவரில் ஜன்னலைச் சுற்றி ஒரு பெரிய குறுக்குவெட்டு உள்ளது, மேலும் ஒரு தூண் இரண்டாக உடைந்துள்ளது. இரண்டு மாடிகள் கொண்ட இந்த வீட்டின் முதல் தளமும் சாய்ந்துள்ளது.
சப்ளை இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற பகவதி பிரசாத் சதி, ‘சந்தை’ கட்டிடம் மற்றும் பிற கட்டுமான நடவடிக்கைகளே இந்த நிலைக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.
மற்றொரு குடியிருப்பாளரான பிரதிமா தேவி கூறுகையில், இப்பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் அடைந்துள்ளன. தற்போதைய பா.ஜ.க மற்றும் முந்தைய காங்கிரஸ் அரசுகள் தங்களின் பிரச்சனைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், உதவி மற்றும் நிவாரணத்திற்காக அவர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் கவனிக்கவில்லை என்று கூறினார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய சாமோலி மாவட்ட மாஜிஸ்திரேட் ஹிமான்ஷு குரானா அவர்கள் நிலைமையை அறிந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நகர் மன்ற வளாகத்தில் தங்குவதற்கான தற்காலிக ஏற்பாடுகளை ஏற்கனவே செய்துள்ளதாகவும் கூறினார். “சில மாதங்களுக்கு முன்பு, நாங்கள் ஐ.ஐ.டி ரூர்க்கியிடம் இப்பகுதியை ஆய்வு செய்து, சேதத்தை மதிப்பீடு செய்து, இதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து, பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்த திட்ட அறிக்கையை வழங்குமாறு கோரினோம்,” என்று ஹிமான்ஷு குரானா கூறினார். .
முன்னதாக, முதல்வரின் செயலாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம், ஜோஷிமத்தின் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவி மற்றும் இழப்பீடாக தலா 1.5 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். இதில் குடும்பங்கள் வேறு இடத்திற்கு மாறுவதற்கு ரூ.50 ஆயிரமும், இழப்பீட்டு முன்பணமாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும்.
“இதுவரை, இந்த இரண்டு கட்டிடங்களும் அப்பகுதியில் உள்ள மற்ற கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், ஜோஷிமத்தில் உள்ள இரண்டு ஹோட்டல்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த கட்டிடமும் தற்போது இடிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட கட்டமைப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால உதவியாக 1.5 லட்சம் வழங்கப்படுகிறது. இதில், 50,000 ரூபாய் (உத்தரகாண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் வழங்கப்படுகிறது) குடும்பங்கள் வேறு இடங்களுக்குச் செல்லவும், அவர்களின் உடனடித் தேவைகளுக்காகவும், மேலும் மொத்த நிவாரண இழப்பீடாக ரூ. 1 லட்சமும் முன்பணமாக வழங்கப்படும்,” என்று மீனாட்சிசுந்தரம் கூறினார்.
அறிவிப்பை வெளியிடுவதற்கு முன், அவர் உள்ளூர் மக்களுடன் கூட்டம் நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சந்தை விலைப்படி இழப்பீடு வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தினார். பயனாளிகளின் ஆலோசனைகளின் அடிப்படையில் மக்கள் நலத்துறையில் சந்தை விலைப்படி இழப்பீடு நிர்ணயம் செய்யப்படும், என்று மீனாட்சிசுந்தரம் கூறினார்.
புதன்கிழமை மீண்டும் ஜோஷிமத் சென்ற முதல்வர் புஷ்கர் சிங் தாமி, வீடுகள் இடிப்பு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தவிர்க்க முடியாத நிலை தவிர, பிற நேர்வுகளில் வீடுகள் எதுவும் இடிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தலைமைச் செயலாளருக்கு முதல்வர் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட 3,000 குடும்பங்களுக்கு ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மறுவாழ்வு கொள்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
சமோலி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜோஷிமத்தில் இதுவரை 723 வீடுகள் விரிசல் அடைந்துள்ளன, மேலும் 86 வீடுகள் ‘ஆபத்து மண்டலத்தில்’ அடையாளம் காணப்பட்டுள்ளன. 145 குடும்பங்களைச் சேர்ந்த 499 பேர் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil