நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மொத்தம் 4,984 என தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தை கையாளும் உச்சநீதிமன்றத்துக்கு உதவும் சட்ட ஆலோசகரான மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா இத்தகவலை வெளியிட்டார்.
இத்தகவல் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
உச்சநீதிமன்றம் தொடர்ந்து பல்வேறு தீர்ப்புகளை வழங்கிவரும் போதிலும் 4,984 வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளது. இதில் 1,899 வழக்குகள் 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருக்கின்றன. உயர் நீதிமன்றங்களின் நிலவர அறிக்கை பார்க்கும்போது இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் சில மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. பிற மாநிலங்களில் சம்பந்தப்பட்ட எல்லை வரம்புக்குட்பட்ட நீதிமன்றங்களே விசாரணைகளை நடத்தி வருகிறது என்றார் ஹன்சாரியா.
இந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை வழக்கறிஞர் சிநேகா கலிதா சமர்ப்பித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2018 டிசம்பர் நிலவரப்படி 4,110 வழக்குகளும், 2020ஆம் ஆண்டு நிலவரப்படி 4,859 வழக்குகளும் நிலுவையில் இருந்தன.
04.12.2018 பிறகு 2,775 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்ட போதிலும், எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகள் 4,122 இல் இருந்து 4,984 ஆக அதிகரித்துள்ளது.
இதன்மூலம், வழக்குகளை எதிர்கொண்டு வருபவர்கள் எம்எல்ஏக்களாகவும், எம்பிக்களாகவும் ஆகின்றனர். கூடிய விரைவில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளுக்கும் தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.
இந்த அதிகார வரம்பிற்கு உட்பட்ட நீதிமன்றங்கள், எம்பிக்கள்/எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளின் விசாரணையை நடத்துவதோடு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மற்ற வழக்குகளையும் கையாண்டு வருகின்றன.
பல மாநிலங்களில், எஸ்சி/எஸ்டி சட்டம், போக்சோ சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களின் கீழ் வரும் வழக்குகளையும் அந்த நீதிபதிகள் விசாரிக்கின்றனர். இதனால், இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
எம்.பி.கள்/எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை கையாளும் நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை பிரத்யேகமாக விசாரிக்க வேண்டும். தாமதத்தை தவிர்ப்பதற்காக அத்தகைய வழக்குகளின் விசாரணை முடிந்த பின்னரே மற்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"விசாரணை தினசரி அடிப்படையில் நடத்தப்பட வேண்டும்..." மற்றும் "உயர்நீதிமன்றம் மற்றும்/அல்லது ஒவ்வொரு மாவட்டத்தின் முதன்மை அமர்வு நீதிபதிகளால் இரண்டு வாரங்களுக்குள் தேவையான பணி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரிக்கவும், குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும் கோரி வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.
பின்னர், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க நவம்பர் 2017 இல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நாடு முழுவதும் இதுபோன்று 12 நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.