சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் முகாமில், ஜவான் ஒருவர் திடீரென சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த மூவரில், இரண்டு பேர் சிகிச்சைக்காக ராய்பூருக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் ராய்ப்பூரிலிருந்து 450 கிமீ தொலைவில் அமைந்துள்ள சுக்மா மாவட்டத்தில் லிங்கம்பள்ளி முகாமில் அரங்கேறியுள்ளது.
முதற்கட்ட தகவலின்படி, அதிகாலை 4:00 மணியளவில் பாதுகாப்புப் பணியைத் தொடங்க வேண்டிய சிஆர்பிஎஃப் ஜவான் ரீத்தேஷ் ரஞ்சன், அதிகாலை 3.25 மணியளவில் தனது படையில் தூங்கிக் கொண்டிருந்த சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார்.
அதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இருவர் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
இறந்தவர்கள் தன்ஜி, ரஜிப் மொண்டல், ராஜ்மணி குமார் யாதவ் மற்றும் தர்மேந்திர கிஆர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில், மூவர் பீகாரை சேர்ந்தவரும், ஒருவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, சக வீரர்களை சுட்டுக்கொன்ற ரஞ்சன் கைது செய்யப்பட்டார். அவரிடம், காவல் துறையினரும், மூத்த சிஆர்பிஎஃப் அதிகாரிகளும், விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர் பேசு மறுப்பதாக கூறப்படுகிறது.
சில நாள்களுக்கு முன்பு தனிப்பட்ட விஷயங்கள் தொடர்பாக சக வீரர்களுடன் ரஞ்சம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர் நவம்பர் 13 அன்று ஊருக்கு செல்ல முடிவு செய்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரின் உடைமைகளையும், செல்போன் அழைப்புகளை சிஆர்பிஎஃப் ஆய்வு செய்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் பூபேஷ் பாகேல் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil