Advertisment

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல்!

தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனுத் தாக்கல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சபரிமலை விவகாரம்: சீராய்வு மனுத் தாக்கல்

சபரிமலை விவகாரம்: சீராய்வு மனுத் தாக்கல்

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Advertisment

ஆனால் இந்த தீர்ப்பிற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. குறிப்பாக பெண்கள் மத்தியில்.

இருப்பினும், பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு, மறு ஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவில் இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பெண்களும் கலந்துகொள்கிறார்கள். மேலும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவும் கேரள அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன.

சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாரம்பரிய வழிபாட்டு முறையை பாதுகாக்க வேண்டும் என்று கோரியும் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருப்புனிதுரா, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள திருனாக்கரா ஆகிய இடங்களில் நேற்று அய்யப்ப பக்தர்கள் பேரணி நடத்தினார்கள்.

இந்த நெருக்கடியான சூழலை சமாளிக்கும் பொருட்டு, முதல்வர் பினராயி விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். ஆனால், கேரள அரசு அழைப்பு விடுத்தும், இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அய்யப்பன் கோவிலின் தலைமை தந்திரியும், கோவிலை முன்பு நிர்வகித்து வந்த பந்தளம் அரச குடும்பத்தினரும் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த சசிகுமார் வர்மா கூறும்போது, "உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவது தொடர்பாக கேரள அரசு ஏற்கனவே ஒரு முடிவை எடுத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. எனவே, அதில் அரச குடும்பத்தினர் யாரும் பங்கேற்கப்போவதில்லை. தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு மறுஆய்வு செய்த பிறகு இதுபோன்ற கூட்டம் நடத்தினால் அதில் பங்கேற்போம்” என்றார்.

அய்யப்பன் கோவில் தலைமை தந்திரிகளில் ஒருவரான கண்டரரு மோகனரு கூறுகையில், "தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடிவு செய்த பிறகு, இது போன்ற சமரச கூட்டத்துக்கு என்ன அவசியம் வந்தது?. இதில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம். கோவிலுக்குள் பெண் போலீசை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கேரள அரசு முடிவு செய்திருப்பது கோவில் பாரம்பரியத்தை மீறிய செயலாகும். நாங்கள் நிச்சயம் மறுஆய்வு மனுதாக்கல் செய்வோம். இது தொடர்பாக பந்தளம் அரச குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

கேரள அரசு ஏற்பாடு செய்துள்ள சமரச பேச்சுவார்த்தையில் பந்தளம் அரச குடும்பத்தினரும், அய்யப்பன் கோவில் தலைமை தந்திரிகளும் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்து இருப்பது, கேரள அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனுத் தாக்கல் செய்யப்போவது இல்லை என்று சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர் டின் ஆணையர் என்.வாசு அறிவித்து உள்ளார்.

இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து, தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த சீராய்வு மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த வழக்கில் நேரடித் தொடர்பில்லாத தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் சீராய்வு மனு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்காது என சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். அப்படி உண்மையில், இந்த விவகாரத்தில் அவர்கள் ஆர்வம் காட்டியிருந்தால், வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போதே, தங்களையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

அதேபோன்று, ஐந்து நீதிபதிகள் கொண்ட பென்ச் தீர்ப்பு வழங்கிய போது, பெண்ணியம் குறித்தும், பெண்ணுரிமை குறித்தும் நிறைய கருத்துகளை சொன்ன பின்னரே, தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால், உச்சநீதிமன்றமே அந்த தீர்ப்பை மாற்ற வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

Kerala Sabarimala Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment