வெளிநாட்டு பணம் கடத்தல் தொடர்பான வழக்கில் கேரள முதல்வர் அவரது அமைச்சரவை அமைச்சர்கள், மற்றும் சபாநாயகர் ஆகியோரை இணைக்கும் பிரமாணப் பத்திரத்தை சுங்கத் துறை தாக்கல் செய்ததையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தை மத்திய நிறுவனம் தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டுள்ளது என்று சாடியுள்ளார்.
குற்றவிசாரணை வழக்கு சட்டம் (சிஆர்பிசி) பிரிவு 164ன் கீழ் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையை மேற்கோள் காட்டி, சுங்கத் துறை முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சட்டமன்ற சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோரின் நிகழ்வில் வெளிநாட்டு பணம் கடத்தப்பட்டதாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. மேலும், ஸ்வப்னாவுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு மனுவில் சுங்கத்துறை பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.
சுங்கத்துறை உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தைக் கண்டித்து, இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) தொண்டர்கள் திருவனந்தபுரம், கொஞ்சி மற்றும் கோழிக்கோட்டில் சனிக்கிழமை பேரணியாக சென்றனர்.
தேர்தல் நேரத்தில் சுங்கத் துறை அரசியல் பணிகளைத் தொடங்கியுள்ளது என்று பினராயி விஜயன் கூறினார். “விசாரணை நிறுவனத்தின் நோக்கங்களும் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கூட்டணியும் இங்கு செயல்படப்போவதில்லை. நாங்கள் அதை எதிர்கொள்வோம் … மாநில மக்கள் எங்களை குறை கூற மாட்டார்கள். ஏனென்றால், எங்கள் வாழ்க்கை அவர்களுக்கு முன் ஒரு திறந்த புத்தகம் போல உள்ளது.” என்று பினராயி விஜயன் கூறினார்.
மேலும், “நான் பாஜகவுக்கும் அவர்களின் இசைக்கு நடனமாடும் மத்திய நிறுவனங்களுக்கும் சொல்ல வேண்டியது இதுதான்; நாங்கள் நீங்கள் கையாளுகிற வகையைச் சேர்ந்தவர்கள் அல்ல. நாங்கள் வித்தியாசமானவர்கள். நீங்கள் என்ன செய்தாலும், இந்த மண் எங்களை குறை சொல்லாது. எங்கள் வாழ்க்கை திறந்த புத்தகம். அதை நீங்கள் விரைவில் உணருவீர்கள்.” என்று பினராயி விஜயன் கூறினார்.
சுங்கத் துறை பிரமாணப்பத்திரம் குறித்து பேசிய பினராயின் விஜயன், “குற்றம் சாட்டப்பட்டவர் (ஸ்வப்னா சுரேஷ்) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில் சுங்க ஆணையர் சில பெயர்களை மேற்கோள் காட்டியுள்ளார். அவர் ஒரு குற்றவியல் இதர புகார் அறிக்கை அளித்துள்ளார். அதில் ஸ்வப்னா மற்றும் சுங்க தடுப்பு கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளித்தனர். மனுவில் பதிலளிக்காத கமிஷனர் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை அளிக்கிறார் என்பது முன்னெப்போதும் இல்லாதது” என்று கூறினார்.
ஜூலை 2020 முதல் ஸ்வப்னா பல்வேறு மத்திய நிறுவனங்களின் காவலில் இருப்பதாக பினராயி விஜயன் கூறினார். “சுங்கத் துறை முன்பு மட்டும் அவர் சில பெரிய விஷயங்களை கூறியதன் காரணம் என்ன?” என்று அவர் கேள்வி எழுப்பினார். “சுங்கத் துறையும் அந்த அறிக்கைக்கு பின்னால் பணியாற்றியவர்கள் பதிலளிக்க வேண்டும். (சிஆர்பிசி) 164ன் கீழ் அறிக்கையை வெளியிடக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சுங்கத் துறை ஆணையர் சபாநாயகர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களை அவதூறு செய்ய முயற்சி செய்துள்ளார். இது மத்தியில் ஆளும் கட்சியின் குறுகிய நலனைப் பாதுகாக்கும் முயற்சி.” என்று கூறினார்.
புலனாய்வு அமைப்புகள் தங்கள் நலனை மேலும் அதிகரிக்க சட்டவிரோத வழிகளை பயன்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார். என்ஐஏ விசாரணையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எதுவும் வரவில்லை என்று கூறிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “இப்போது அவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை நிறுவனங்களை பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கிறார்கள். விசாரணை நிறுவனங்களின் உதவியற்ற தன்மையை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. எந்தவொரு புலனாய்வு நிறுவனமும் இந்த முறையில் (முன்னால்) சென்றிருக்கக்கூடாது. இந்த வழக்கில், நிறுவனம் சரியான திசையில் செயல்படுவதைத் தடுக்கிறது. அவர்கள் எஜமானர்கள் காட்டும் திசையில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்…” என்றார்.
எதிர்க்கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் இணைந்து செயல்படுவதாக குற்றம் சாட்டிய பினராயி விஜயன், “அவர்கள் எல்.டி.எஃப்-ஐ அழிக்க விரும்புகிறார்கள். (ஆனால்) நீங்கள் அழிக்கும் அளவுக்கு நாங்கள் எதையும் செய்யவில்லை. கடந்த 5 ஆண்டுகளில், ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய விஷயங்களை மட்டுமே நாங்கள் செய்துள்ளோம். எல்.டி.எஃப் (அதன்) வளர்ச்சி நடவடிக்கைகளுடன் முன்னேறும். பாஜகவும் காங்கிரசும் இந்த மாநில மக்களைத் துன்புறுத்துகின்றன என்பதை உணர வேண்டும்.” என்று கூறினார்.