2ஜி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை, உயர்நீதிமன்றம் ரத்து செய்ய வாய்ப்புள்ளது என நம்புகிறோம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மூத்த அமைச்சர்கள் கூறுகையில், 2ஜி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிபதி அளித்துள்ள தீர்ப்பில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜா, திமுக எம்பி கனிமொழி மற்றும் சில தொழிலதிபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், இத்தீர்ப்பை கொஞ்ச காலத்திற்கு தான் கொண்டாட முடியும். ஏனெனில், சிபிஐ நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது கிடையாது. இதற்குபிற்கு மேல் நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து காங்கிரசுக்கு நோட்டீஸ் அனுப்பும் போது, அவர்களது கொண்டாட்டம் அடங்கிவிடும் என்றனர்.
2ஜி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் விரிவாக ஆலோசனை நடத்தினார். இன்னும் ஒரு வாரத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சிபிஐ கூறுகையில், "2ஜி தீர்ப்பை எதிர்த்து சட்டப்பூர்வமான அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள், சிபிஐ நீதிமன்றத்தால் ஒழுங்கான முறையில் விசாரிக்கப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசு மூன்று முக்கிய தகவல்களை அடிப்படையாக வைத்து மேல் முறையீடு செய்ய உள்ளது. முதலாவது, 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு மத்திய புலனாய்வு கமிஷன் உத்தரவின் அடிப்படையில் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது. இரண்டாவது, உச்சநீதிமன்றம் 122 லைசன்ஸ்களை ரத்து செய்தது. சட்டத்திற்கு புறம்பாக அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி லைசன்சை ரத்து செய்தது. மூன்றாவதாக, ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் ஆண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சி ஏறத்தாழ 250,000 கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்டியுள்ளது.
"2008ம் ஆண்டு நடைபெற்ற அலைக்கற்றை ஒதுக்கீட்டின் குறைந்தபட்ச மதிப்பு ரூ.1658 கோடியாக இருந்தது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்று கூறிவிட்டு, லேட்டாக வந்தவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. கடைசித் தேதிக்கு பின் வந்த செக்குகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அப்போது என்னென்ன நாடகங்கள் நடந்தன என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சட்ட முறைகேடு நடந்துள்ளது என்பதை உச்சநீதிமன்றமே உணர்ந்துள்ளபோது, அனைவரும் எப்படி குற்றமற்றவர்களாக இருக்க முடியும்?" என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது 2012 நவம்பர் மாதம் நடந்த முதல் அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலத்தில் அரசுக்கு ரூ.9407 கோடி வருமானம் கிடைத்தது. அடுத்ததாக 2013 மார்ச்சில் நடந்த ஏலத்தில் 3539 கோடி வருமானம் கிடைத்தது. தொடர்ந்து பிப்ரவரி 2014ல் நடந்த ஏலத்தில் 61,162 கோடியும், ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சி ஆட்சியில் மார்ச் 2015ல் நடந்த ஏலத்தில் 1,09874 கோடியும், அக்டோபர் 2016ல் நடந்த ஏலத்தில் 65,789 கோடியும் வருமானம் கிடைத்தது.
ஸ்பெக்ட்ரம் ஏலம் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அடிப்படையாக வைத்து பார்க்கும் பொழுது, கீழ் நீதிமன்றத்தின் 2ஜி வழக்கு தீர்ப்பு, நிச்சயம் மேல் நீதிமன்றத்தில் ரத்தாகும் என நம்புகிறோம் என அமைச்சர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.