சைபர் குற்றங்களில் ஈடுபட்ட பல்வேறு போலி வங்கி கணக்குகளை முடக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது.
சைபர் குற்றங்களில் ஈடுபட்ட வருவாயை டெபாசிட் செய்து வந்த சுமார் 4.5 லட்சம் வங்கி கணக்குகள் கடந்த ஆண்டு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், கனரா பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க் மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிகளில் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Cyber crimes: 4.5 lakh ‘mule’ accounts frozen, many in public sector banks
இது தொடர்பாக, பிரதமர் அலுவலகத்திற்கு உள்துறை அமைச்சகத்தின் சைபர் க்ரைம் தடுப்பு மையம் சார்பாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளில் உள்ள குறைபாடுகள் குறித்தும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் இது போன்ற போலி கணக்குகளில் இருந்து ஏடிஎம்-ஐ பயன்படுத்தி பணம் எடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்குகள் மற்ற நபர்களின் KYC ஆவணங்களைக் கொண்டு தொடங்கப்பட்டவை.
இந்த விவகாரம் தொடர்பான தொடர் கூட்டங்கள் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுடன் நடைபெற்றது.
குடிமக்கள் நிதியியல் சைபர் மோசடிகள் அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பின் பதிவுகளின் படி, இது குறித்த புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 40 ஆயிரம் போலி கணக்குகள், பஞ்சாப் நேஷனல் பேங்கில் 10 ஆயிரம் போலி கணக்குகள், கனரா பேங்கில் 7 ஆயிரம் போலி கணக்குகள், கோடாக் மகேந்திரா பேங்கில் 6 ஆயிரம் போலி கணக்குகள் மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்கில் 5 ஆயிரம் போலி கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
“இந்த போலி வங்கி கணக்குகளில் இருந்து மோசடிக்காரர்கள் மூன்று விதமாக பணம் எடுக்கிறார்கள். காசோலை, டிஜிட்டல் மற்றும் ஏடிஎம் மூலமாக இவற்றில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளன. சுமார் ரூ. 17 ஆயிரம் கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது“ என சைபர் குற்றங்கள் தொடர்பான வட்டாரம் தெரிவிக்கிறது.
பிரதமர் அலுவலகத்தில் இந்த புகார்கள் குறித்து சுமார் மூன்று மணி நேரம் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், குற்றங்கள் நடப்பதற்கான காரணிகளைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது போன்ற போலி கணக்குகள் தொடங்குவதில் வங்கி மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கு குறித்து ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு நடப்பு கணக்கு மற்றும் காசோலை வசதி ஏற்படுத்தி கொடுக்காததும் இது போன்ற குற்றங்களுக்கு வழிவகுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலி கணக்குகள் மூலம் சிறிய அளவிலான பணப்பரிமாற்றம் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
போலி கணக்குகள் தொடங்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வங்கி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.