போலி வலைத்தளங்கள், ரூ.30 கோடி மோசடி: புதுச்சேரி போலீஸ் வேட்டையில் சிக்கிய சைபர் கும்பல்- விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்

புதுச்சேரி காவல்துறை, இந்திய அளவில் கட்டுமானப் பொருட்கள் நிறுவனங்களின் பெயரில் போலி வலைத்தளங்கள் உருவாக்கி, ரூ.30 கோடிக்கும் மேல் மோசடி செய்த சைபர் குற்றவாளிக் கும்பலை பீகாரில் அதிரடியாகக் கைது செய்துள்ளது.

புதுச்சேரி காவல்துறை, இந்திய அளவில் கட்டுமானப் பொருட்கள் நிறுவனங்களின் பெயரில் போலி வலைத்தளங்கள் உருவாக்கி, ரூ.30 கோடிக்கும் மேல் மோசடி செய்த சைபர் குற்றவாளிக் கும்பலை பீகாரில் அதிரடியாகக் கைது செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
WhatsApp Image 2025-06-28 at 4.17.15 PM

Puducherry

புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த சேதுராமன் என்பவர், இணையவழிக் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்தார். ஃபேஸ்புக்கில் வைசாக் ஸ்டீல் (VIZAG STEEL) நிறுவனத்தின் விளம்பரத்தைப் பார்த்து, சந்தை விலையை விட 10% குறைவாக TMT கம்பிகள் கிடைப்பதாக நம்பியுள்ளார். விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு, அனைத்து விவரங்களையும் பெற்றிருக்கிறார். அந்த நிறுவனத்தின் பெயரிலேயே ஜிஎஸ்டி எண் மற்றும் வங்கிக் கணக்குகள் இருந்ததால், ரூ.30 லட்சத்து 97 ஆயிரம் பணத்தைச் செலுத்தியுள்ளார். நான்கு நாட்களாகியும் அந்த தொலைபேசி எண்ணையோ, ஃபேஸ்புக் பக்கத்தையோ தொடர்புகொள்ள முடியாததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

Advertisment

இந்த புகாரின் பேரில், புதுச்சேரி இணையவழிக் காவல் நிலையத்தின் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்படி, காவல் ஆய்வாளர் S. தியாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்.

சைபர் பொறி வீசிய காவல்துறை

விசாரணையின் முதல் கட்டத்திலேயே, சேதுராமன் பார்த்தது வைசாக் ஸ்டீல் நிறுவனத்தின் உண்மையான ஃபேஸ்புக் பக்கம் அல்ல, அது இணையவழி மோசடிக்காரர்களின் வேலை என்பதைப் போலீசார் கண்டறிந்தனர். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆதாரங்களையும் தகவல்களையும் சேகரித்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

Advertisment
Advertisements

இந்த விசாரணையில் கிடைத்த தகவல்களை அடுத்து, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா உத்தரவின் பேரிலும், காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின்படியும், ஆய்வாளர் தியாகராஜன் வழிகாட்டுதலின்படி, கீர்த்தி தலைமையிலான இணையவழிப் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தலைமை காவலர் மணிமொழி, காவலர்கள் வினோத், பாலாஜி, மற்றும் வினோத்குமார் ஆகியோர் அடங்கிய இக்குழு, கடந்த மாதம் 20-ம் தேதி மத்திய பிரதேசத்திற்கு விரைந்தது.

அங்கு விசாரித்து பல்வேறு தகவல்களைத் திரட்டியதில், குற்றவாளிகள் ஜார்கண்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் ஜார்கண்ட் விரைந்தனர். அங்கு நடந்த விசாரணையில், குற்றவாளி பீகார் சென்றது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை பீகார் மாநிலம் பாட்னாவிற்கு இந்த மாதம் 23-ம் தேதி விரைந்தது. அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பலைக் கைது செய்தது.

விசாரணை மேற்கொண்டதில், 40-க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள், லேப்டாப், டேப் மற்றும் ரூ.34 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இணையவழி மோசடிக் கும்பல் பீகார் தலைநகரிலேயே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புதுச்சேரிக்குக் கொண்டு வரப்பட்டது.

அதிர்ச்சித் தகவல்கள்

புதுச்சேரிக்குக் கொண்டு வந்து குற்றவாளிகளை விசாரிக்கும்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இணையவழி மோசடிக் கும்பல், 2019-ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான நபர்களை ஏமாற்றி உள்ளது. இவர்கள் ஜிந்தாள் ஸ்டீல் அண்ட் பவர் (Jindal Steel and Power), வைசாக் ஸ்டீல் பிளான்ட் (Vizag Steel Plant), ஜேஎஸ் டபிள்யூ (JSW), ஜுவாரி சிமெண்ட் (Zuari Cement) போன்ற மிகப்பெரிய கட்டுமானப் பொருட்கள் தயாரிக்கும் இந்திய நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர். மேலும், அனிமல் ஃபுட்ஸ் ப்ராடக்ட் செல்லிங் (Animal Foods Product Selling via online), தனி லோன் ப்ராசசிங் (Dhani Loan Processing), லால் கிலா பாஸ்மதி ரைஸ் (LAl Qila Basmati Rice), ஆன்லைன் க்ளோதிங் (Online Clothing), ஹோட்டல் ரூம் ஸ்டே (Hotel Room Stay), கோகனட் எக்ஸ்போர்ட் (Coconut Export), கோல் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Coal India Pvt Ltd) போன்ற பிற துறைகளின் பெயர்களையும் பயன்படுத்தியுள்ளனர்.

WhatsApp Image 2025-06-28 at 4.18.41 PM

இந்தக் கும்பல், உண்மையான நிறுவனங்களின் விளம்பர உத்திகளைக் கையாண்டு, ஃபேஸ்புக் பக்கங்கள், வங்கிக் கணக்குகள், செல்போன்கள் போன்றவற்றை அந்த நிறுவனங்களுக்கு ஒத்திருப்பது போல உருவாக்கி மோசடி பணத்தைப் பெற்றுள்ளது. இவர்களின் செயல்பாடுகள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இயங்கியுள்ளன:

பணம் பெறும் குழு: போலி வங்கிக் கணக்குகளை வாங்கி, சில வங்கி மேலாளர்களின் உதவியுடன் பணத்தை எடுப்பதற்கு ஒரு குழு.

மோசடிப் பேச்சுவார்த்தைக் குழு: பொதுமக்களை ஏமாற்றத் திறமையாகப் பேசுவதற்காக ஒரு குழு.

வங்கிக் கணக்குக் குழு: போலி வங்கிக் கணக்குகளை வாங்குவதற்கென்றே ஒரு குழு.

விளம்பரக் குழு: ஃபேஸ்புக் விளம்பரம் செய்ய மற்றும் அதில் பதிவு செய்ய பல்வேறு புகைப்படங்களை உருவாக்கவும், செல்போன் எண்களை வாங்கவும் ஒரு குழு.

ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவர் நியமிக்கப்பட்டு, அவர்களுக்குக் கீழ் பல்வேறு நபர்கள் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடி செய்த பணத்தை இந்தக் குழுவினர் அனைவரும் பங்கு போட்டுக்கொண்டுள்ளனர். இந்தக் குழுவில் இன்னும் பல்வேறு நபர்கள் பீகார், உத்தர பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பதுங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

குற்றப் பதிவுகள் மற்றும் கொழுத்த லாபம்!
கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான விசாரணையில், இவர்கள் மீது இந்தியா முழுவதும் 52 எஃப்ஐஆர் புகார்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட புகார்கள் இவர்கள் மீது பதிவாகியுள்ளன. கடந்த ஆறு மாதங்களில் மட்டும், ரூ.32 கோடிக்கும் மேல் பொது மக்களின் பணத்தை இணையவழி மூலமாக மேற்கண்ட நிறுவனங்களின் பெயரைச் சொல்லி கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நபர்களிடமிருந்து 20 டைரிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில், யார் யாரை ஏமாற்றினார்கள், எந்தெந்த நிறுவனங்களின் பெயரைச் சொல்லி ஏமாற்றினார்கள் என்ற விவரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அந்த டைரிகளில் 4500-க்கும் மேற்பட்டவர்களின் பெயர், செல்போன் எண், விலாசம், இமெயில் ஐடி, வங்கி விவரங்கள் ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன. அவை சம்பந்தமாக விசாரித்தால், இன்னும் பல கோடி ரூபாய் அவர்கள் இந்தியா முழுவதும் ஏமாற்றி இருப்பது தெரியவரும்.

கைது செய்யப்பட்ட இந்தக் கும்பல், இணையவழியில் விளம்பரம் செய்து, வங்கிக் கணக்கிற்குப் பணத்தைப் பெறுவதும், அந்தப் பணத்தை எடுப்பதும் இவர்களின் வேலையாக இருந்துள்ளது. பெரிய கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள், இவர்களின் ஃபேஸ்புக் விளம்பரங்களை நம்பி, உண்மையான நிறுவனங்கள்தான் இவை என்று பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளனர். கட்டுமான நிறுவனங்களுக்கு நிறைய இரும்புகள், சிமெண்ட், இரும்புத் தகடுகள் தேவைப்படுவதால், விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதாலும், இலவசமாகச் சரக்குகளை வந்து இறக்கி வைக்கிறோம் என்று சொன்னதாலும், பெரிய பெரிய கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் இவர்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஆர்டர் செய்து ஏமாந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

WhatsApp Image 2025-06-28 at 4.18.29 PM

கடந்த ஆறு மாதத் தகவல்கள் மட்டுமே இவ்வளவு கோடி ரூபாய் மோசடியாகக் கொள்ளையடித்திருப்பது தெரியவர, 2019-ம் ஆண்டில் இருந்து இவர்களுடைய மோசடி வேலையைக் கணக்கிட்டால் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்பது விசாரணையில் தெரியவருகிறது. மேலும், ஒருவரை ஏமாற்றிய பிறகு, அந்த செல்போனை இவர்கள் உபயோகிப்பதில்லை. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தங்கள் உபயோகித்த அனைத்துப் பொருட்களையுமே இவர்கள் மீண்டும் உபயோகிக்காததால், பழைய தகவல்களைத் திரட்டுவதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இணைய உத்திகளை வைத்து பழைய தகவல்களைத் திரட்ட போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

இணையவழி மோசடிக் கும்பல் கொள்ளையடித்த பணத்தை வைத்து மிக உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அவர்களுடைய செல்போனை ஆராய்ந்ததில் தெரியவருகிறது. நிறையப் பெண்களுடன் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், வெவ்வேறு இடங்களுக்குச் சென்ற புகைப்படங்களும் அவர்களுடைய செல்போனில் உள்ளன. மேலும், பல்வேறு வகை துப்பாக்கிகள் அவர்களிடம் இருப்பது பற்றிய புகைப்படங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தி வீடியோ எடுத்து வைத்துள்ளதும் அவர்களுடைய செல்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த அனைவருமே தனித்தனியாக பல லட்ச ரூபாய் மதிப்புடைய சொகுசு கார்கள் வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் கைது செய்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழே நான்கு சொகுசு கார்கள் இருந்ததை கண்டுபிடித்து, பீகார் மாநில போலீசாருக்குத் தெரியப்படுத்தி உள்ளனர்.

இதுவரை 8 மாநில போலீசாருக்கு, அந்த மாநிலங்களில் யாரிடமெல்லாம் மோசடி செய்தார்களோ, அவர்களுடைய லேப்டாப்பில் இருந்து எடுத்த விவரங்களைச் சொல்லி, இவர்கள் மீது உள்ள 15 வழக்குகளைக் கண்டுபிடித்து, இவர்கள் கைது செய்துள்ள விவரத்தை புதுச்சேரி இணையவழிப் போலீசார் தெரிவித்துள்ளனர். இன்னும் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக மற்ற மாநில போலீசாருக்குத் தெரியப்படுத்த உள்ளனர்.

இணையவழி மோசடிக் கும்பல் குறைந்தபட்சம் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.1.25 கோடி வரை கட்டுமான நிறுவன உரிமையாளர்களை ஏமாற்றியுள்ளனர். இருப்பினும், பெரும்பாலான பணத்தை இழந்தவர்கள் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட நபர்கள் இவர்களிடம் ஏமாந்து இருப்பது தெரியவருகிறது. அது சம்பந்தமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பீகார், உத்தர பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநில போலீசாருக்கு அவர்கள் வழக்கு சம்பந்தமாக இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் தெரியவரும் பட்சத்தில் அனைத்து மாநில போலீசாருக்கும் இது பற்றிய தகவல் தெரிவிக்கப்படும்.

மேற்கூறிய ஐந்து குற்றவாளிகள் 2019-ம் ஆண்டு முதல் பல்வேறு நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். மேலும், இந்தக் கும்பல் எந்த மாநில போலீசாரிடமும் இதற்கு முன் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் திறம்பட விசாரணை செய்த விசாரணை அதிகாரி ஆய்வாளர் S. தியாகராஜன் மற்றும் கேரளாவில் வெளியான 'கண்ணூர் ஸ்குவாட்' பட பாணியில் மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகார் சென்று பல இடையூறுகளைக் கடந்து துணிச்சலாகச் சென்று 5 குற்றவாளிகளைக் கைது செய்த ஆய்வாளர் கீர்த்தி மற்றும் தலைமை காவலர் மணிமொழி, காவலர்கள் வினோத், பாலாஜி, மற்றும் வினோத்குமார் ஆகியோர்களை DIG சத்தியசுந்தரம் IPS மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் திருப்பாதி IPS வெகுவாகப் பாராட்டினார்.

சமீபத்தில் நடைபெறும் இணையவழி குற்றங்களான போலியான உடனடிக் கடன் செயலிகள், சமூக வலைத்தள மோசடிகள், போலி அழைப்புகள், ஆன்லைன் ஷாப்பிங் செய்தியை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம். பணப் பரிவர்த்தனை, வங்கிக் கணக்கு போன்றவற்றில் சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குச் சென்று சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், 1930 / 04132276144 / 9489205246 ஆகிய எண்கள் மூலம் இணையவழிக் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு புகார் மற்றும் இணையவழி சம்பந்தமான சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி.

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: