அரபிக் கடலில் தென்கிழக்கு பகுதியில் கோவாவிற்கு அருகே நேற்று இரவு 11.30 மணிக்கு பிபோர்ஜாய் புயல் உருவானது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக மாறும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ’பிபோர்ஜாய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக மாறும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “ இந்த புயல் முதல் 3 மணி நேரம் நகராமல் இருந்தது. இன்று காலை நகரத்தொடங்கி உள்ளது. கோவாவிலிருந்து தென் மேற்கு திசையில் 900 கிலோ மீட்டரிலும், மும்பையிலிருந்து தென்மேற்கு திசையில் 1,020 கிலோ மீட்டர் தொலைவிலும், போர்பந்தரின் தென்மேற்கு திசையில் 1,090 கிலோமீட்டர் தொலைவிலும், கராச்சியின் தெற்கு திசையில் 1,380 கிலோமீட்டர் திசையிலும் புயல் மையம் கொண்டுள்ளது” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலின் மத்திய கிழக்கு பகுதியில், மணி நேரத்தில் 80 முதல் 100 கிலோ மீட்டர் பலத்த காற்று வீசும் என்று கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் வீசும் காற்று வேகம் ஒரு மணி நேரத்திற்கு 115 முதல் 125 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. அரபிக் கடலின் மத்திய மேற்கு பகுதிக்கு அருகே உள்ள இடங்கள், தெற்கு அரபிக் கடல், வடக்கு கேரளா- கர்நாடகா- கோவா கடலோரப் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கூறப்படுகிறது.
’பிபோர்ஜாய்’ புயலால், கேரளாவில் தொடங்கும் தென் மேற்கு பருவ மழை பாதிக்கப்படும். அடுத்த 3 வாரங்களில் இரண்டாவது புயல் , வடக்கு பெருங்கடலில் உருவாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“