Cyclone Fani: ஃபனி புயல், ஒடிசாவை ஒரு புரட்டு புரட்டிபோட்டது என்று தான் கூற வேண்டும். அந்தளவிற்கு அங்கு கடுமையான பாதிப்புகளை புயல் ஏற்படுத்தியுள்ளது. வானிலை முன்னறிவிப்பு மையங்களின் துல்லிய கணிப்பு மற்றும் துரித நடவடிக்கைகளால், பெருமளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
1 கோடி மக்கள், 10 ஆயிரம் கிராமங்கள், 52 நகரப்பகுதிகள் என ஒடிசாவையே ஒருகாட்டு காட்டிவிட்டு சென்றுள்ளது இந்த ஃபனி புயல். தற்போது அங்கு இயல்புநிலை மெல்ல மெல்ல திரும்பும் நிலையில், சேத மதிப்பு குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபனி புயலுக்கு, ஒடிசாவில் 16 பேர் பலியாகியுள்ளனர்.
ஃபனி புயல் சேதம் குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியதாவது, மாநிலத்தின் முக்கிய கட்டமைப்புகளான மின்சாரம், தொலைதொடர்பு, குடிநீர் விநியோகம் ஆகியவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. புரி மற்றும் குர்தா பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதன்காரணமாக, அங்கு மின்சாரம் முற்றிலும் தடைபட்டுள்ளது. மின் கட்டமைப்பு பணிகளை முழுமையாக செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
புவனேஸ்வர் பகுதியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. ம்ககள் அதிகமாக கூடும் இடங்களான மருத்துவமனை, ரயில்வே ஸ்டேசன், ஏர்போர்ட் உள்ளிட்ட இடங்களில் மின் வசதிகள் உடனடியாக செய்து தரப்பட்டு வருவதாக முதல்வர் பட்நாயக் கூறினார்.
முதல்வர் பட்நாயக்குடன் பேசியுள்ள பிரதமர் மோடி, மாநிலத்திற்கு தேவையான நிதியை விரைந்து மத்திய அரசு வழங்கும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வானிலை முன்னறிவிப்பு மையங்களின் துல்லிய கணிப்பு மற்றும் துரித நடவடிக்கைகளால், உயிர்ச்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது. 1999ம் ஆண்டு வீசிய புயலில் சிக்கி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், மக்கள் உடனடியாக அப்பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்கைவக்கப்பட்டனர்.
மத்திய அரசின் நிதியுதவியுடன், தேசிய புயல் அபாய சீர்திருத்த திட்டத்தின் உதவியுடன் ஒடிசாவில் 316 பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில அரசும் இதே அளவிலான நிவாரண முகாம்களை மாநில நிதியின் மூலமும், சர்வதேச அமைப்புகளான செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் மூலமும் நிர்மாணித்துள்ளன.
இந்த நிவாரண முகாம்கள், அதிகளவில் மக்கள் பயன்பெறும் வகையிலும், புயலால் விரைவில் சேதமடையாத வண்ணமும் இருக்குமாறு கட்டமைக்கப்பட்டுள்ளன. கால்நடைகளுக்கு என இந்த முகாம்களில் தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிவாரண முகாம்களில், வானிலை முன்னறிவிப்பு உபகரணங்கள், மழைக்கு ஒதுங்க கூ டாரங்கள், ரேடார் கருவிகள், புயலை அளவிடும் ரேடார்கள், காற்றழுத்தமானி உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
புயல் குறித்த முன்னறிவிப்புகளை வல்லுநர்கள் பகிர்ந்து கொள்ள சாட்டிலைட் போன் வசதி செய்து தரப்பட்டுள்ளது. புயல் குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, டிவி, ரேடியோ, மொபைல் மற்றும் அதற்கென்று சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள சாதனங்களின் உதவியுடன் மக்களுக்கு தெரிவித்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
பூரி பகுதியின் கடற்கரையை ஒட்டிய நோலியா மீனவர்குப்பம் பகுதியிலிருந்து மட்டும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம், செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் மற்றும் பிஜூ யுவ வாஹினி போன்ற உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல பெரிதும் உதவின.
அக்சய பாத்ரா தொண்டு நிறுவனம் சார்பில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உள்ளூர் அமைப்புகள், மக்களுக்கு பன் உள்ளிட்ட சிற்றுண்டிகளை வழங்கின.
கழிப்பறையை பயன்படுத்த 200ககும் மேற்பட்டோர் வரிசையில் நின்றிருந்தது. சிறுவர்கள் உள்ளிட்ட குழந்தைகள் பாதுகாப்பு கருதி, கீழ்புறத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தது. கர்ப்பிணிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளித்தது உள்ளிட்டவகள், நிவாரண முகாம்களில் தான் கண்ட காட்சிகளாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மதுமிதா மொகாபத்ரா பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.