Cyclone Fani: சென்னைக்கு வரவிருந்த ஃபனி புயல் கடைசி நேரத்தில் ஒடிசாவுக்கு திசை மாறிச் சென்று விட்டது.
ஒடிசாவின் கிழக்கு கடலோரப் பகுதியில் நேற்று கரையைக் கடந்த இந்தப் புயல் ஊரையே புரட்டிப் போட்டிருக்கிறது.
175 கி.மீ வேகத்தில் அடித்த காற்றினால் கரண்ட், தொலைத் தொடர்பு, போக்குவரத்து என எல்லாமே ‘கட்’டாகி விட்டன. அதோடு 8 பேரின் உயிரையும் காவு வாங்கியிருக்கிறது.
இந்திய வானிலை மையத்தால் சூறாவளிப் புயல் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த ஃபனி புயலில் இருந்து மக்களை காப்பாற்ற ஏறக்குறைய 10,000 கிராமங்கள் மற்றும் 52 நகர்ப்புற பகுதிகளில் இருந்து 12 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
புயலின் கோரத் தாண்டவ வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கின்றன. கார், பஸ் முதலானவை காகிதம் போல் காற்றில் பறக்கின்றன.
Cyclone Fani at Odisha
சமீப ஆண்டுகளில் வந்த புயல்களில் ஃபனி கொடூரமான ஒன்று என்கிறார்கள் அதிகாரிகள். பூரி, நயாகர், கேந்திரபாரா ஆகிய மாவட்டங்களில் 3 பேர் இறந்துள்ளதாக மீட்புக் குழு அதிகாரி பி.பி.சேதி கூறியிருக்கிறார்.
”ஃபனி கரையைக் கடக்க காலை 8 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்பே பூரியில் 174 கி.மீ வேகத்தில் காற்று வீசத் தொடங்கியது. அதிகாரிகள் கணித்ததைப் போலவே ஃபனியின் செயல்பாடுகள் இருந்தது. அதனால் பூரி மற்றும் ஜெகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்கள் பாதிப்படையலாம் என்பது அவர்களின் எண்ணம்” என்றார் ஐ.எம்.டி-யின் கூடுதல் டி.ஜி ம்ருத்யுன்ஜய மொகபத்ரா.
அலைகள் 1.5 மீட்டர் உயரக்கூடும் என வானிலை வட்டாரங்கள் தெரிவித்தன. சூறாவளியைத் தொடர்ந்து கடுமையான மழைப் பொழிவும் இருக்கும், குறிப்பிட்ட இடங்களில் மிக கனமழை பெய்யும், எனவும் கூறப்பட்டது.
ஐ.எம்.டி-யின் அறிக்கைபடி, ஃபனி புயல் காலை 10 மணியளவில் முழுமையாகக் கரையைக் கடந்தது. 11.30 மணியளவில், புவனேஸ்வரில் இருந்து 10 கி.மீ கிழக்கேயும், கட்டாக்கில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் இருந்ததாகத் தெரிகிறது.
ஃபனி வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்துச் சென்று இன்று மாலை 4 மணியளவில் வங்காள தேசத்திற்கு செல்லக்கூடும் என்கிறார்கள் அதிகாரிகள்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பூரி மாவட்டம் முற்றிலும் சேதமடைந்திருப்பதாகத் தெரிவித்தார். ”உள்கட்டமைப்பு முழுமையாக சேதமாகியிருக்கிறது. மின்சாரம் மறுசீரமைப்பு பணி மிகவும் சவாலனதாக இருக்கும்” என்றார். முதற்கட்டமாக போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடலோரப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் போடப்பட்டு, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.