/indian-express-tamil/media/media_files/2024/12/04/NnbKcWBVbRI5x7TQBr0T.jpg)
புதுச்சேரியில் ஃபீஞ்சல் புயலால் 35 கிராமங்களை சேர்ந்த 3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
புதுச்சேரியில் ஃபீஞ்சல் புயல் மற்றும் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயலால் 35 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 90 தேசிய பேரிடர் மீட்பு படையினர், 140 ராணுவ வீரர்கள், 4000 அரசு ஊழியர்கள் 4-வது நாளாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 30 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி முழுவதும் உள்ள 208 முகாம்களில் 15 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர். இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழைக்கு 5 பசு மாடுகள், ஒரு எருமை மாடு, 29 கன்றுகள், 8 ஆடுகள் இறந்துள்ளது. கோழி, வாத்து உள்ளிட்ட 5 ஆயிரம் பறவைகள் இறந்துள்ளன.
புதுச்சேரியில் மட்டும் நெற்பயிர், வாழை, மணிலா, காய்கறி என 5 ஆயிரத்து 527 ஹெக்டேர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது. 500-க்கும் மேற்பட்ட மரங்கள், 400 மின் கம்பங்கள, 55 படகுகள் சேதமாகி உள்ளது. 27 வீடுகள் முழுமையாகவும், 10 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 200 குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
இதுதவிர 12 பள்ளி கட்டிடங்கள், 4 கல்லூரி கட்டிடங்கள், 9 ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள், 4 மாட்டு கொட்டகைகளும் சேதமடைந்துள்ளன. இதுவரை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் 3 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர அரசியல் கட்சி பிரமூகர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது
இவை புதுச்சேரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் துறையின் முதல் கட்ட சேத மதிப்பீட்டில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.