ஓகி புயலால் தமிழ்நாட்டில் 237 பேரை காணவில்லை. 24 பேர் பலியானார்கள் என நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அமைச்சர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஓகி புயல் கடந்த நவம்பர் 30-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தையும், கேரளாவின் பெரும் பகுதியையும் தாக்கியது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் புவி அறிவியல் அமைச்சகத்தின் இணை மந்திரி ஒய்.எஸ்.சவுத்ரி பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு :
ஓகி புயலால் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சேதம் அடைந்தது. லட்சத்தீவுக்கு உட்பட்ட 10 தீவுகளும் சேதமடைந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 22 பேரும், நாகை மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். 237 பேரை காணவில்லை. 7 ஆயிரத்து 98 குடிசைகள் சேதத்துக்கு உள்ளாகின. அவற்றில் ஆயிரத்து 108 குடிசைகள் முற்றிலும் சேதமடைந்தன.
தமிழ்நாட்டில் ஓகி புயலால் 7 ஆயிரத்து 654 கால்நடைகளும், லட்சத்தீவில் ஆயிரத்து 691 கால்நடைகளும் இறந்தன. 5 ஆயிரத்து 135 ஹெக்டேர் நிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டன. 15 ஆயிரத்து 858 மின்சாரக் கம்பங்கள், 95 மின்மாற்றிகள் சேதமடைந்தன. 25 ஆயிரத்து 526 மரங்கள் விழுந்துவிட்டன. ஏரி, குளங்கள், கால்வாய்களில் 67-க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டன. 103 அரசு கட்டிடங்கள், 75 கிலோ மீட்டர் நீள மாநில நெடுஞ்சாலை, 98.93 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலை, 417 கிலோ மீட்டர் உள்ளூர் சாலைகள் சேதமடைந்தன. லட்சத்தீவில் 32 ஆயிரத்து 747 தென்னை மரங்கள் விழுந்தன.
கேரளாவில் 75 பேர் மரணமடைந்தனர். 234 பேர் காயமடைந்தனர். 208-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. ஓகி புயலால் கேரளாவில் 10 மாவட்டங்களில் 33 ஆயிரத்து 12 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். காணாமல் போன மற்றும் சேதமடைந்த படகுகளின் எண்ணிக்கை 384 ஆகும். 41 கிலோ மீட்டர் நீள சாலைகள் சேதமடைந்தன.
இவ்வாறு அமைச்சரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.