Puri, Odisha Today Cyclone Fani Update: கஜா புயலைவிட மிக மிக மோசமான புயல் என இந்திய வானிலை மையத்தால் கணிக்கப்பட்ட ஃபனி புயல் ஒடிசாவில் பூரி மாவட்டத்தில் இன்னும் சற்று நேரத்தில் கரையை கடக்கிறது.
ஒடிசாவில் புயல் கரையைக் கடப்பதால் 10 ஆயிரம் கிராமங்களும், 52 நகரங்களும் பாதிப்புக்குள்ளாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் உச்சக்கட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 11 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான பகுதிகளுக்கும் புயல் நிவாரண முகாம்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். இதே போன்று ஒடிசா தலைநகரான புவனேஸ்வரில் இருந்து விமானங்கள் எதுவும் புறப்படவில்லை. விமான நிலையம் நள்ளிரவு முதல் மூடப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்த பின்னரே எப்போது விமானப் போக்குவரத்து தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியாகும்.
புயல் மீட்பு பணிக்காக 7 போர்க்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், 6 விமானங்கள் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளதாக கப்பற்படை தெரிவித்துள்ளது. ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் புயல் நிவாரண பாதுகாப்பு மையங்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பு, நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
பொதுமக்கள் புயல் ஆபத்து நீங்கும் வரை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பாதுகாப்பு கருதி ஒடிசாவின் கரையோர பகுதிகளுக்கு மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. புயல் நீங்கிய பிறகு மின்சார இணைப்புகள் படிப்படியாக சீர் செய்யப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
கரையை கடக்க தொடங்கிய ஃபனி!
தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 54 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.இந்தியாவில் கிழக்கு கடற்கரையில் கடந்த முப்பது ஆண்டுகளில் தாக்கிய புயல்களில் நான்காவது பெரிய புயல் ஃபனி என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதலே ஃபனி தனது கோரதாண்டவத்தை காட்ட தொடங்கியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு தாக்கிய ஓகி புயலினால் 200 பேர் பலியாகினர், நூற்றுக்கணக்கானோர் தம் வாழ்விடங்களை இழந்தனர். இதுப்போன்ற எந்த ஒரு அசாம்பாவிதமும் ஒடிசாவில் ஏற்பட்டு விட கூடாது என்பதே அனைவரின் பிராத்தனையாக உள்ளது. ஒடிசாவில் 850 ஆண்டுகள் பழமையான ஜகநாதர் கோயில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக வணங்கப்பட்டு வருகிறது. ஃபனி புயலால் ஜகநாதர் கோயில் அழிந்து விட கூடாது என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.