குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக மதமாற்றம் தொடர்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில், குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால், "குஜராத்தில் இருந்து அனைத்து மக்களுக்கும்" "அயோத்தி ராமர் கோவிலுக்கு இலவச பயண வசதி செய்யப்படும்" என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்தார்.
“ஒரு ஓட்டு கூட காங்கிரஸுக்குப் போகக் கூடாது” என்று மக்களைக் கேட்டுக் கொண்ட அரவிந்த கெஜ்ரிவால், தன் மீது வீசப்படும் “தினசரி துஷ்பிரயோகங்களைத்” திட்டமிட பா.ஜ.க.,வும் காங்கிரஸும் “இரகசிய நள்ளிரவுக் கூட்டங்களை” நடத்தி வருவதாகவும், தாஹோதில் நடந்த கூட்டத்தில் பழங்குடியினரிடம் அவர் உரையாற்றினார்.
இதையும் படியுங்கள்: உதயசூரியன் சின்னம் கேட்கும் உத்தவ் தாக்கரே: தேர்தல் கமிஷனுக்கு கடிதம்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடன், சனிக்கிழமை தாஹோத் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் சாலைகளின் நிலை குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “குஜராத்தில் சாலைகள் நன்றாக இருப்பதாக அவர்கள் (பா.ஜ.க) எப்போதும் கூறிக்கொள்கிறார்கள்... ஆனால் எல்லா இடங்களிலும் சாலைகளின் நிலை பரிதாபம். ஒரு மணிநேரம் செல்ல வேண்டிய பயணத்திற்கு இப்போது மூன்று மணி நேரம் ஆகும்... டிசம்பர் 1 ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் போது, முதலில் முக்கியமான சாலைகளை ஆறு மாதங்களுக்குள் சீரமைத்து, மூன்று ஆண்டுகளுக்குள், கிராமங்களை இணைக்கும் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சாலையையும் சரி செய்வோம்,” என்று கூறினார்.
குஜராத் முழுவதும் சனிக்கிழமை ஒட்டப்பட்ட அடையாளம் தெரியாத ஆம் ஆத்மிக்கு எதிரான சுவரொட்டிகளைப் பற்றிக் குறிப்பிடாமல், "அயோத்தியில் ராமர் கோவிலுக்கு சென்றது திருப்திகரமான அனுபவம்" என்று டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் பேசினார். சுவரொட்டிகளில் ஒன்று வதோதராவில் பா.ஜ.க மற்றும் ஆம் ஆத்மி கட்சியினரிடையே மோதலை ஏற்படுத்தியது, வதோராவில் அரவிந்த் கெஜ்ரிவாலும் பக்வந்த் மானும் சாலைப் பேரணியை நடத்த உள்ளனர். மேலும், “அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் அடுத்த ஆண்டு தயாராகிவிடும். டெல்லியில், நாங்கள் ஒரு திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்... ராமர் பக்தர்களை ராமச்சந்திரஜியை வழிபட அயோத்திக்கு நான் இலவசமாக அழைத்துச் செல்கிறேன். டெல்லியில் இருந்து ராம பக்தர்களுடன் சிறப்பு ரயில் செல்கிறது. உங்களை உங்கள் வீட்டிலிருந்து அழைத்துச் செல்வது முதல் அயோத்தியில் தங்குவது, உணவுகள், தரிசனம் மற்றும் உங்களை வீட்டில் இறக்கி விடுவது வரை அனைத்தும் இலவசம். நான் தனிப்பட்ட முறையில் பயணிகளை ஸ்டேஷனில் பார்க்கிறேன், அவர்கள் திரும்பும்போது அவர்களை மீண்டும் காண்கிறேன். மக்கள் வரும்போது, அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் திருப்திகரமான அனுபவம் என்று என்னிடம் கூறுகிறார்கள்... குஜராத்தில் நாங்கள் ஆட்சி அமைத்ததும், உங்கள் அனைவரையும் இலவசமாக அயோத்திக்கு அழைத்துச் செல்வோம்,” என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிதான் அடுத்த ஆட்சியை அமைக்கும் என்று “ஒரு ரகசிய அரசு நிறுவனம்” வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டியதில் இருந்து பா.ஜ.க “தூக்கமின்றி” இருப்பதாகக் கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், “ஆம் ஆத்மி கட்சி இரண்டு அல்லது மூன்று இடங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் மற்றும் 94-95 இடங்களை வெல்லும் என்று அறிக்கை கூறியுள்ளது.... தேர்தலுக்கு இன்னும் 40-50 நாட்களே உள்ள நிலையில், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் சாதனையை முறியடிக்க எங்களுக்கு கொஞ்சம் அழுத்தம் தேவை. டிசம்பர் 1 ஆம் தேதி ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும்... குஜராத்தில் மாற்றத்தின் புயல் வீசுகிறது,” என்று கூறினார்.
ஆம் ஆத்மி அறிவித்த இலவசச் சலுகைகள், அரசியல்வாதிகளால் கொள்ளையடிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பொதுக் கருவூலத்தை முடித்துவிடுமோ என்று அக்கட்சிகள் அஞ்சுவதாகக் கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், “ஐந்தாண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் இருந்து 4 ஏக்கர் நிலம் வைத்திருந்த ஒரு எம்.எல்.ஏ.,விடம் இன்று 1,000 ஏக்கர் இருப்பதாக ஒருவர் என்னிடம் கூறினார். அரசாங்கம் கடனில் இருக்கிறது என்கிறார்கள்... ஏன் கடனில் இருக்கிறது? குஜராத் அரசு ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி செலவழிக்கிறது, ஆனால் உங்கள் கிராமத்தில் ஒரு புதிய பள்ளி அல்லது புதிய சாலையைப் பார்த்தீர்களா? அவர்கள் தங்கள் மனைவி, குழந்தைகள், தாத்தா பெயரில் நிலங்களை உருவாக்குகிறார்கள். பணத்தை சுவிஸ் வங்கிகளுக்கு அனுப்புகிறார்கள். அவர்களிடமிருந்து ஒவ்வொரு ரூபாயையும் திரும்பப் பெறுவோம்” என்று கூறினார்.
குஜராத்தில் கோதுமை, அரிசி, பருத்தி, சன்னா பருப்பு மற்றும் நிலக்கடலை ஆகிய ஐந்து பயிர்களை ஆம் ஆத்மி அரசாங்கம் குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்தார்.
காங்கிரஸுக்கு எந்த வாக்குகளும் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு மக்களை வலியுறுத்திய அரவிந்த் கெஜ்ரிவால், “கணிப்பின்படி காங்கிரஸுக்கு 10 இடங்களுக்கும் குறைவாகவே கிடைக்கும்... காங்கிரஸுக்கு ஒரு ஓட்டுக் கூட கொடுக்க வேண்டாம். அனைத்து காங்கிரஸ் ஓட்டுகளும் ஆம் ஆத்மிக்கு வர வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார்.
குஜராத்தி மொழியில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியது பார்வையாளர்களிடமிருந்து பலத்த ஆரவாரத்தைப் பெற்றது, 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ. 1,000 செலுத்தும் ஆம் ஆத்மி உத்தரவாதத்தை அரவிந்த் மீண்டும் வலியுறுத்தினார். அதே பேச்சில் தன்னை "சகோதரன்" மற்றும் "மகன்" என்று அழைத்த அரவிந்த் கெஜ்ரிவால், "உங்களுக்கு (பெண்களுக்கு) வங்கிக் கணக்குகள் இல்லையென்றால், இப்போதே அவற்றைத் திறக்கவும், ஏனென்றால் பெண்களுக்கு நாங்கள் மாதத்திற்கு 1,000 ரூபாய் வழங்கப் போகிறோம். பெண்கள் மாதம் 1000 ரூபாய் சொந்தமாக பெற்றால் அவர்களால் படிப்பை முடிக்க முடியாதா? இப்போது நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் சகோதரர் இங்கே இருக்கிறார்... நான் கணக்கீடு செய்துள்ளேன், குஜராத்தில் 20,000 மொஹல்லா கிளினிக்குகளை உருவாக்குவோம். உங்கள் குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால், கவலைப்பட வேண்டாம், உங்கள் மகன் உங்களை கவனித்துக்கொள்வார்,” என்றும் கூறினார். தேர்வுத் தாள்கள் கசிந்தால் ஆம் ஆத்மி அரசு "பொறுக்காது" என்றும், "குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்" என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். பயிர் சேதத்திற்கு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும், விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வலையமைப்பு அமைப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.