உத்தரப் பிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தில் (Auraiya district) ஆசிரியர் அடித்ததில் 15 வயதான பட்டியலின மாணவர் திங்கள்கிழமை (செப்.26) காலை உயிரிழந்தார்.
இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 308 (காயம் ஏற்படுத்தி உயிரிழப்பு), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்) மற்றும் 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறுவனின் மரணத்துக்கு நீதி கோரி அவுரியா மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் இரண்டு போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
சிறுவனின் உடற்கூராய்வு முடிந்த பின்னர் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, சிறுவனின் உடலை பள்ளியின் முன்னர் கிடத்தி நீதி கோரினர்.
இதனால் திடீர் வன்முறை ஏற்பட்டது. போலீஸின் இரு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுவனின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கான்பூர் பகுதி போலீஸ் கூடுதல் பொது இயக்குனர் பானு பாஸ்கர் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுவனின் பெற்றோர், அவரது உடலை கிராமத்துக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்வதாக உறுதியளித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் மகேந்திர பிரதாப் சிங் கூறுகையில், “செப்டம்பர் 7ஆம் தேதி மாணவர் ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து மாணவரை சம்பந்தப்பட்ட ஆசிரியர் குச்சியால் அடித்துள்ளார்.
இந்த நிலையில் மாணவனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த மாணவனுக்கு உடலில் பிரச்னைகள் இருந்துள்ளன.
முதற்கட்ட விசாரணையில், மாணவனின் மருத்துவ செலவுக்கு இரண்டு தவணையாக ரூ.40 ஆயிரம் கொடுக்க அந்த ஆசிரியர் சம்மதித்துள்ளார்.
இந்த நிலையில், மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்” என்றார். தற்போது மாணவனை தாக்கியதாக ஆசிரியர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீஸ் சூப்பிரண்டு சாரு நிஹாம் தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவனின் உடற்கூராய்வு அறிக்கைகள் வெளியான பின்பு, மற்ற விசாரணைகள் நடத்தப்படும்” என்றார். மாணவன் உயிரிழப்புக்கான உடற்கூராய்வு அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“