சோன்பத்ரா மாவட்டம் ஷாகஞ்ச் பகுதியில் ஒப்பந்த லைன்மேனாக இருக்கும் படேல் மீது சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ஷாகஞ்ச் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஷாகஞ்ச் காவல் நிலையத்தில் சமார் புகார் அளித்ததை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு படேல் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசம், சோன்பத்ரா மாவட்டத்தில் மின்சாரத் துறையின் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தாக்கி, ஷூவை நக்கச் செய்ததாக கொடூர சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சில நாட்கள் கழிந்து அந்த நபர் வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இந்த வன்கொடுமை சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட தேஜ்பாலி சிங் படேல் கைது செய்யப்பட்டார். பழுதடைந்த மின் வயரிங் சரிபார்த்ததற்காக கோபமடைந்த படேல் தலித் சமூகத்தைச் சேர்ந்த நபரை வியாழக்கிழமை தாக்கியதாக கூறப்படுகிறது.
ஒரு வீடியோவில், படேல், 21 வயதான ராஜேந்திர சமாரை கொடூரமாக தாக்குவதோடு துஷ்பிரயோகம் செய்வதை வீடியோ படம்பிடிக்கும் நபரிடம் ஒரு குழுவில் பகிருமாறு கேட்டுக் கொள்வதும் தெரிகிறது. இரண்டாவது வீடியோவில், தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை தொழிலாளியின் ஷூக்களை நக்குவதும், காதுகளைப் பிடித்து மன்னிப்பு கேட்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சோன்பத்ரா மாவட்டம் ஷாகஞ்ச் பகுதியில் ஒப்பந்த லைன்மேனாக இருக்கும் படேல் மீது சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ஷாகஞ்ச் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஷாகஞ்ச் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு படேல் கைது செய்யப்பட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரன், “நான் எனது மாமா வீட்டிற்கு சென்றிருந்தேன். மின் வயரில் ஏதோ பிரச்னை, நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தேஜ்பாலி அங்கு வந்து என்னை தடிகளால் தாக்க ஆரம்பித்தார். அவர் என்னை தனது ஷூவில் எச்சில் துப்பி அதை நக்க வைத்தார். இரண்டு நாட்களாக நான் எதுவும் பேசவில்லை. ஆனால், இப்போது வழக்குப் பதிவு செய்ய வந்துள்ளேன்.” என்று கூறினார்.
சோன்பரா வட்ட அதிகாரி (கோராவால்) அமித் குமார் கூறுகையில், “ஜூலை 8-ம் தேதி சமூக ஊடகங்கள் மூலம் இரண்டு வைரல் வீடியோக்கள் எங்களுக்கு வந்தன. வீடியோக்களில், இருந்த நபர் தேஜ்பாலி என அடையாளம் காணப்பட்டார். லைன்மேன் அவரைத் தாக்கத் தொடங்கினார். காதுகளைப் பிடித்துக்கொண்டு அவரை உட்காரச் செய்து, ஷூக்களை நக்கச் செய்துள்ளார்” என்று கூறினார்.
படேலுக்கு எதிராக ஐ.பி.சி பிரிவு 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 504 (அமைதியை கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்), 506 (குற்றமிரட்டல்) மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி மீது ஒருவர் சிறுநீர் கழிப்பதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சோன்பத்ராவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த நபரை துன்புறுத்தியதற்கு அம்மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்து கடுமையான எதிர்வினை வந்துள்ளது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சித்தியில் நடந்த சம்பவத்துடன் ஒப்பிட்டுப் பேசினார்.
இந்த சம்பவத்தின் வீடியோவுடன் அகிலேஷ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “உ.பி.யின் சோன்பத்ராவில், மத்தியப் பிரதேசத்தின் சித்தியில் நடந்ததை விட வெட்கக்கேடான ஒரு சம்பவம் நடந்துள்ளது. இப்படிப்பட்ட குற்றவாளிகளைப் பார்த்து புல்டோசர் ஏன் பஞ்சராகிறது? பாதிக்கப்பட்டவரின் கால்களைக் கழுவும் நாடகம் எப்போது நடக்கும் என்று பார்ப்போம். தலித் ஒடுக்குமுறையில் கறுப்பு வரலாற்றின் அத்தியாயத்தை பா.ஜ.க உருவாக்கி வருகிறது” என்றார்.
பீம் ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆசாத்தும் இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், “பாறையில் சம்மட்டியால் அடித்தால் தீப்பொறியை பிறப்பிக்கிறது” என்று கூறியுள்ளார்.
சந்திரசேகர் ஆசாத் இந்தியில் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “தேஜ்பாலி சிங்கின் வெற்று ஆணவத்தைப் பாருங்கள்… தேஜ்பாலி ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால், மனதளவில் அவர் நிலப்பிரபுத்துவ சமூகமாக மாற முயற்சி செய்கிறார். நிலப்பிரபுத்துவ பிறப்பு என்று வரும்போது, உங்களைப் போன்றவர்களின் கேவலமான செயல்களால் சிதைந்து போன இந்த பகுஜன் ஒற்றுமை பயனுள்ளது என்பதை நினைவில் வையுங்கள்.” என்று கூறினார்.
“உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள், இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறது, ஜனநாயகத்தில் அதிகாரம் இருக்கிறது. இந்த ஒடுக்கப்பட்டவர்கள் எழுந்து நிற்கும் நாளில் இதுபோன்ற செயற்கையான ‘சிங்குகளுக்கு’ என்ன நடக்கும் என பாருங்கள்?” என்று சந்திரசேகர ஆசாத் கேட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் உ.பி பிரிவும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளது. “…பா.ஜ.க ஆட்சியில் தலித் ஒடுக்குமுறை நிற்கவில்லை. தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள், முதியவர்கள் என்றாவது பாதுகாப்பாக உணர்வார்களா? இதுதான் பா.ஜ.க-வின் உண்மையான ராமராஜ்ஜியமா?” என்று கேட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.