உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் தலித் உதவிப் பேராசிரியை ஒருவருக்கு ஒரு பெண் பேராசிரியை உட்பட இரண்டு சக பேராசிரியர்கள், மற்றும் இரண்டு மாணவர்களால் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, 4 பேர் மீதும் வாரணாசி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் மே 22 ஆம் தேதி நடந்த நிலையில், ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை வழக்குப் பதிவு செய்ய காவல்துறை மறுத்துவிட்டது என்று பாதிக்கப்பட்ட அந்த மூத்த பேராசிரியை குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சக பேராசிரியர்களும், மாணவர்களும் தனது ஆடையை அகற்றி பல்கலைக்கழகத்தைச் சுற்றி வர வைப்பது பற்றி வழக்கமாகப் பேசி வந்தனர் என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
"இதன் தொடர்ச்சியாக, மே 22 அன்று மதியம் 2 மணியளவில், அவர்களில் ஒருவர் எனது அறைக்கு வந்து, என்னை பணியில் இருந்து நீக்கிவிட்டு என்னைக் கொன்றுவிடுவேன் என்று கூறினார். நான் என் அறையிலிருந்து வெளியே வந்தேன், மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் அறையின் கதவை மூடிவிட்டார்கள். ஆண்களில் ஒருவர் என்னைப் பிடித்து என் ஆடைகளைக் கிழித்த பிறகு என்னுடன் தகாத செயல்களைச் செய்ய முயன்றார். மற்றொருவர் அதை பதிவு செய்தார். மற்றவர்கள் என்னை அடித்து உதைத்தார்கள். நான் கூச்சலிட்ட பிறகு சிலர் வந்து என்னைக் காப்பாற்றினார்கள். இந்த புகாருடன் சி.சி.டி.வி காட்சிகளையும் இணைத்துள்ளேன்” என்று பாதிக்கப்பட்ட பேராசிரியை போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை, அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், “நான் தலித் என்பதால் தான் குறிவைக்கப்படுகிறேன். ஒருவரை அவரது பணியில் இருந்து நீக்க நான் மறுத்ததில்தான் முழுப் பிரச்சினையும் வந்தது. அவர்கள் எனக்கு அழுத்தம் கொடுத்தனர், நான் மறுத்துவிட்டேன். பின்னர் அவர்கள் இதைச் செய்துள்ளார்கள்.
நான் காவல் நிலையத்திலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பல புகார்களை அளித்தேன். மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், எஸ்.சி மற்றும் எஸ்.டி ஆணையம் மற்றும் முதல்வர் அலுவலகம் ஆகியவற்றுக்கு நான் கடிதம் எழுதிய பிறகே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது” என்று அவர் கூறினார்.
காவல்துறை உதவி ஆணையர் பிரவீன் குமார் சிங் கூறுகையில், “குற்றவியல் நடைமுறைச் சட்ட (சி.ஆர்.பி.சி) விதிகளின்படி முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
நடைமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ் சிங் தெரிவித்தார். "இந்த வழக்கு இப்போது காவல்துறையிடம் உள்ளது, எனவே அவர்கள் விசாரிப்பார்கள். நாங்கள் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றுவோம்,” என்று அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தர் சுதிர் கே ஜெயினை போனில் தொடர்பு கொண்டபோது, அவர்
பதிலளிக்கவில்லை.
4 பேருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 342 (தவறான சிறைவாசம்), 354-பி (அடையாளம் செய்யும் நோக்கத்துடன் பெண்ணைத் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல்), 504 (மீறலைத் தூண்டும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமாதானம்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) மற்றும் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட உதவிப் பேராசிரியர்களில் ஒருவரை தொடர்பு கொண்டபோது அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. மற்றவர்களுக்கு எதிராகவும் இதே போன்ற புகார்களை அவர் பதிவு செய்திருக்கிறார்… அவருக்கு அவருடைய தனிப்பட்ட நோக்கங்கள் உள்ளன. அதனால்தான் அவர் இதைச் செய்கிறார். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பு முறையான விசாரணை நடத்தப்பட்டிருந்தால், அது இந்த நிலைக்கு வந்திருக்காது." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“