வங்கக் கடலில் உருவான டானா புயல் இன்று அதிகாலை வடக்கு ஒடிசாவில் உள்ள பிதர்கனிகா மற்றும் டமாரா இடையே தீவிர புயலாக கரையைக் கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 23ம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டு இருந்த டானா புயல், வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதியில் 23ம் தேதி இரவே தீவிரப் புயலாக வலுப்பெற்றது.
புயல் ஒடிசா- மேற்குவங்க கடல் பகுதியில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி, டானா புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது.
புயல் கரையை கடந்த போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. நேற்று இரவில் இருந்து அதிகாலை வரை 5 மணிநேரத்திற்கு மேலாக டானா புயல் கரையைக் கடந்தது.
மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்தன. தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகரும் புயல் சாகர் தீவில் இருந்து 150 கி.மீ. தென்மேற்கில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் வலுவிழக்க கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டானா புயல் கரையைக் கடந்த நிலையில் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வன்சபா, பத்ரக், தமாரா உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்தன. புர்பா மிதினாபூரில் உள்ள திகா கடற்கரைப் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
பலத்த காற்றுடன் கனமழை கொட்டியதால், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“