தாயை விட வேலை முக்கியமா? வாட்ஸ் ஆப்பில் தாய் இறுதிச் சடங்கு, கொரியரில் அஸ்தி...

வட நாட்டில் வசித்து வரும் பெண் ஒருவர் வேலையில் பிஸியாக இருப்பதால் வாட்ஸ் ஆப்பில் தாயின் இறுதிச் சடங்கு பார்த்து, அஸ்தியை கொரியரில் அனுப்ப சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் ஆப்பில் இறுதிச் சடங்கு :

மும்பையில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள மனோர் என்ற கிராமத்தில், நீராபாய் படேல் மற்றும் தீரஜ் படேல் என்ற தம்பதி வசித்து வந்தனர். தீரஜ் படேல் கடந்த சில வருடங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்தப் படுக்கையாக இருக்கிறார். இவருடை 65 வயதான மனைவி நீராபாய் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த தம்பதிக்கு ஒரே மகள் இருக்கிறார். அவர் திருமணமாகி குஜராத்தில் வசித்து வருகிறார். குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் இவருக்கு, உடல்நலக்குறைவால் தாய் நீராபாய் இறந்துவிட்டார் என்ற செய்தி அனுப்பப்பட்டது. அதற்கு அவர், “நான் வேலையில் ரொம்ப பிஸியாக இருக்கிறேன். ஊருக்கு வர முடியவில்லை.” என்றார். பின்னர் ஊர் மக்களிடம் வாட்ஸ் ஆப் வீடியோ காலில் தாயின் முகத்தை காட்டுமாறு கூறினார். தனது தாய்க்கு நடந்த இறுதிச் சடங்கை வாட்ஸ் ஆப்பிலேயே பார்த்தார்.

கொரியரில் அஸ்தி:

இதற்கே கடும் கோபத்தில் இருந்த ஊர் மக்கள், அடுத்ததாக அந்த பெண் கூறியதற்கு கொந்தளித்துவிட்டனர். இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை, அஸ்தி கரைப்பதற்காக ஊருக்கு வா என்று அழைத்துள்ளனர். அதற்கு அவர், அஸ்தியை கொரியரில் அனுப்பிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

தாயின் மரணத்தை விடவா வேலை முக்கியமாக போய்விட்டது? பக்கவாதத்தால் படுக்கையில் இருக்கும் தந்தையை பற்றிக்கூட கவலைப்படாமல் இப்படி ஒரு மகளால் இருக்க முடியுமா என்று கடுங்கோபத்தில் உள்ளனர் ஊர் மக்கள்.

கிராம மக்களே அந்த பெண்ணின் தாய் உடலை தகனம் செய்து, அஸ்தியை அவர் கேட்டதுபோல கொரியரில் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close