தாவூத் இப்ராகிம், மசூத் அசார் தீவிரவாதிகள் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
Terrorists : சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ், மசூத் அசார், ஹபீஸ் சயீது, தாவூத் இப்ராஹிம், லக்வி ஆகியோரை தீவிரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ், மசூத் அசார், ஹபீஸ் சயீது, தாவூத் இப்ராஹிம், லக்வி ஆகியோரை தீவிரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Advertisment
சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் நடைமுறையில் உள்ளது. தீவிரவாதத்துடன் தொடர்புடைய தனிநபரை பயங்கரவாதியாக அறிவித்து, நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கான மசோதா, பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேறியதை தொடர்ந்து, ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்தார்.
இந்நிலையில், திருத்தப்பட்ட, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷே முகம்மது தீவிரவாத இயக்க தலைவர் மசூத் அசார், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீது, 1993ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம், மற்றும் 26/11 தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய ஜாகி உர் ரஹ்மான் லக்வி ஆகியோர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின் கீழ், முதல்முறையாக இவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பார்லிமென்ட், காஷ்மீர் சட்டசபை, பதன்கோட்டில் நடந்த தாக்குதல் சம்பவங்களில் மசூத் அசாருக்கு தொடர்பு உள்ளது. 2000ம் ஆண்டு டில்லி செங்கோட்டையிலும், 2009 ராய்ப்பூர் மற்றும் மும்பையில் நடந்த தாக்குதலில் லக்விக்கு தொடர்பு உள்ளது. மும்பையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தாவூத் இப்ராகிமுக்கு தொடர்பு உள்ளது.