Pavneet Singh Chadha
கடந்த ஆண்டு செப்டம்பரில் காங்கிரஸிலிருந்து பா.ஜ.க.,வுக்கு மாறிய எட்டு ‘அதிருப்தி’ எம்.எல்.ஏ.,க்களில் ஒருவருக்கு இடமளிக்க, பதவியை “தியாகம்” செய்ய வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் அவரிடம் பேசியதாக கூறிய ஒரு நாள் கழித்து, கோவா பொதுப்பணித் துறை (PWD) அமைச்சர் நிலேஷ் கப்ரால் ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Day after he spoke of ‘sacrifice’, Goa minister Cabral resigns; to make way for Congress turncoat Sequeira
காங்கிரஸில் இருந்து விலகிய எட்டு எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான நுவெம் எம்.எல்.ஏ அலிக்சோ செக்வேரா அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். “நிலேஷ் கப்ரால் மந்திரிசபையிலிருந்து ராஜினாமா செய்யும் கடிதத்தை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளார். இன்று மாலை 7 மணிக்கு ராஜ்பவனில் அலிக்சோ செக்வேரா அமைச்சரவையில் பதவியேற்பார்” என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
முதல்வர் பிரமோத் சாவந்துக்கு அனுப்பிய தனது ராஜினாமா கடிதத்தில், "நீங்கள் முன்பு செய்த உறுதிமொழிகளின் காரணமாக, நீங்கள் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் கோரிக்கையின்படி, உங்கள் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்கிறேன்" என்று நிலேஷ் கப்ரால் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பிரமோத் சாவந்த், “கட்சியின் நலன் கருதி பொதுப்பணித்துறை அமைச்சர் நிலேஷ் கப்ராலை ராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுத்தோம், அவர் ராஜினாமா செய்துள்ளார். பா.ஜ.க.வில் சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ.வான அலிக்சோ செக்வேராவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. இது கட்சியின் முடிவு. நிலேஷ் கப்ரால் கட்சியின் முக்கிய உறுப்பினர். இத்தகைய சூழ்நிலையில் கட்சிக்காரர்கள் தியாகம் செய்ய வேண்டும்,” என்று கூறினார்.
கர்கோரெம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நிலேஷ் கப்ரால், சட்டம் மற்றும் நீதித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் ஆகிய துறைகளையும் கவனித்து வந்தார்.
அலிக்சோ செக்வேரா, முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் மற்றும் கலங்குட் எம்.எல்.ஏ மைக்கேல் லோபோ ஆகியோருக்கு இடமளிக்கும் வகையில் அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்த ஊகங்கள் ஓராண்டுக்கும் மேலாக பரவி வருகின்றன. கோவாவில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைத்த பிறகு மாநில அமைச்சரவையில் இதுவே முதல் மறுசீரமைப்பு.
இந்த வார தொடக்கத்தில் நிலேஷ் கப்ரால் டெல்லிக்கு அழைக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன, அவர் டெல்லியில் இருந்த நேரத்தில் அலிக்சோ செக்வேராவுக்கு அமைச்சரவை பதவிக்கான கட்சியின் உறுதிப்பாட்டை நிறைவேற்ற நிலேஷ் கப்ரால் அமைச்சரவையிலிருந்து ஒதுங்க வேண்டும் என்று கட்சி உயர் தலைமை தெளிவுபடுத்தியது.
சனிக்கிழமை இரவு, நிலேஷ் கப்ரால் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், முதல்வர் தன்னை ராஜினாமா செய்யும்படி கேட்கவில்லை என்று கூறினார். “மூன்று நாட்களுக்கு முன்பு, ஒரு விவாதம் நடந்தது, எட்டு எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் கூறினர். எனக்கு மட்டுமல்ல, எல்லா அமைச்சர்களிடமும் சொன்னார்கள் என்று நினைக்கிறேன்… என்னை பதவி விலகச் சொல்லவில்லை, ஆனால் ‘தியாகம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது, ஆனால் அது எனக்கு மட்டுமல்ல, மற்ற அமைச்சர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. முதல்வர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. என்னை இன்னும் ராஜினாமா செய்ய சொல்லவில்லை... நீங்கள் ‘தியாகம்’ செய்ய வேண்டி வரும் என்று சொல்லப்பட்டது. அப்படித்தான் சொன்னார்கள்,” என்று நிலேஷ் கப்ரால் கூறியிருந்தார்.
அலிக்சோ செக்வேராவும் சனிக்கிழமை இரவு இந்த தகவல்களை ஊகங்கள் என்று நிராகரித்தார். “இந்த நிமிடம் வரை என்னை அமைச்சர் ஆக்குவதாக யாரும் சொல்லவில்லை. இது வெறும் ஊகம், வெறும் வதந்திகள். நான் பதவியேற்கப் போகிறேன் அல்லது திகம்பர் காமத் பதவியேற்கப் போகிறார் அல்லது மைக்கேல் லோபோ அல்லது நாங்கள் அனைவரும் பதவியேற்கிறோம் என்ற செய்திகளை நான் ஒரு வருடத்திற்கும் மேலாக கேள்விப்பட்டு வருகிறேன்,” என்று அலிக்சோ செக்வேரா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“