Mahender Singh Manral , Jignasa Sinha
குடியரசு தினத்தின் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் டெல்லிக்குள் நுழைந்து, செங்கோட்டையை முற்றுகையிட்ட ஒரு நாள் கழித்து டெல்லி காவல்துறை 25 நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்துள்ளது. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட 40 விவசாய சங்க பிரதிநிதிகளில் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஒரு முதல் தகவல் அறிக்கையில், பஞ்சாபி நடிகர் தீப் சித்து, கேங்க்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறிய, மல்வா யூத் ஃபெடெரேசன் தலைவருமான லக்கா சிதானாவின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
சம்யுக்த கிஷான் மோர்ச்சாவின் 6 செய்தித் தொடர்பாளர்கள் உட்பட 37 விவசாய சங்க தலைவர்களின் பெயர்கள் சமய்பூர் பத்லி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. காவல்த்துறை ஆய்வாளர் அனில் குமார் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜக்கித் சிங் தல்லேவால் (சிதுப்பூர் பி.கே.யூவின் தலைவர்), பல்பிர் சிங் ராஜேவால் (ராஜேவால் பி.கே.யூ. தலைவர்), தர்ஷன் பால் (கிராந்திகரி கிஷான் சங்க தலைவர்), ராகேஷ் திக்கைத் ( பி.கே.யூ தலைவர்), குல்வந்த் சிங் சந்து (ஜம்ஹூரி கிஷான் சபாவின் பொது செயலாளர்), யோகேந்திர யாதவ் (ஸ்வராஜ் கட்சியின் தலைவர்) ஆகிய 6 செய்தித்தொடர்பாளர்களின் பெயர்கள் வழக்கில் இடம்பெற்றதுள்ளது. இதில் யோகேந்திர யாதவ் தவிர்த்து மீதம் உள்ளவர்கள் அரசின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க : கேள்விக்குறியான பேச்சுவார்த்தை… பின்வாங்கும் விவசாய சங்கத் தலைவர்கள்
முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்ற, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மற்ற விவசாய சங்க பிரதிநிதிகள் பெயர்கள் பின்வருமாறு ;
பூதா சிங் புர்ஜ்கில் (பி.கே.யூ. தகௌந்தா தலைவர்), நிர்பாய் சிங் துடிகே (கிர்தி கிஷான் யூனியன் தலைவர்) , ருல்து சிங் மான்சா (பஞ்சாபி கிஷான் யூனியன் தலைவர்), இந்திரஜித் சிங் ( கிஷான் சங்கர்ஷ் கமிட்டியின் தலைவர்), ஹர்ஜிந்தர் சிங் தண்டா (அஸாத் கிஷான் சங்கர்ஷ் கமிட்டி தலைவர்கள்), குர்பக்ஷ் சிங் (ஜெய் கிஷான் அந்தோலனின் தலைவர்), சத்னம் சிங் பன்னு (கிஸான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் தலைவர்), கன்வல்ப்ரீத் சிங் பன்னு ( கிஷான் சங்கர்ஷ் கமிட்டி தலைவர்), ஹோகிந்தர் சிங் உக்ராஹான் ( உக்ராஹான் பி.கே.யூ தலைவர்), சுர்ஜித் சிங் பூல் (பி.கே.யூ க்ராந்திகரி தலைவர்), ஹர்மீத் சிங் கடியான் (பி.கே.யூ கடியான் தலைவர்), சத்னம் சிங் சனி ( தௌபா பி.கே.யூவின் பொது செயலாளர்), போக் சிங் மான்சா ( மான்சா பி.கே.யூவின் தலைவர்), பல்விந்தர் சிங் ஔலக் (மஜா கிஷான் கமிட்டியின் தலைவர்), சத்னம் சிங் பெரு (இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர்), பாரத் பூத்தா சிங் சதிபூர் (பாரதி கிஷான் மன்ச்சின் தலைவர்), பல்தேவ் சிங் சிர்ஸா(லோக் பலாய் இன்சாஃப் நலச்சமூகத்தின் தலைவர்), ஜக்பீர் சிங் தண்டா (தௌபா கிஷான் sஅமிதியின் தலைவர்), முகேஷ் சந்திரா (தௌபா கிஷான் சங்கர்ஷ் கமிட்டியின் தலைவர்), சுக்பால் சிங் தஃப்பர் (கன்னா சங்கர்ஷ் கமிட்டியின் தலைவர்), ஹரிந்தர் சிங் லகோவல் (லக்கோவல் பி.கே.யூவின் பொதுச்ச்செயலாளர்), கிர்பால் சிங் நதுவாலா (கிஷான் பச்சாவ் மோர்ச்சாவின் தலைவர்), பிரேம் சிங் பங்கு (அனைத்திந்திய விவசாய சங்க பஞ்சாப் தலைவர்), குர்ணம் சிங் சதுணி (ஹரியானா பி.கே.யூ), கவிதா குருகந்தி (மஹிலா கிஷான் அதிகார் மன்ச் தலைவர்), ரிஷிபால் அம்பவதா (அம்பவதாவின் பி.கே.யூ தலைவர்), ப்ரேம் சிங் கெலாட் (அனைத்திந்திய விவசாயிகள் மகாசபையின் ஹரியானா மாநில தலைவர்).
மற்றொரு எஃப்.ஐ.ஆரியில் மேதா பத்கர், வி.எம்.சிங் மற்றும் அவிக் ஷாஹாவின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
வன்முறை, சதித்திட்டம், கொலை முயற்சி மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் அவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. போராட்டக்காரர்கள் மற்றும் அவர்களின் தலைவர்கள், ஏற்கனவே செய்து கொண்ட பரஸ்பர ஒப்புதல் படி செயல்படக்கூடாது என்ற முன்கூட்டிய நோக்கத்தோடு திட்டமிட்டு செயல்பட்டனர். அதனால் தான் இந்த வன்முறை ஏற்பட்டது என்று எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டிருந்தது.
காவல்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, விவசாயிகளின் ட்ராக்டர் அணி வகுப்பிற்கு நான்கு வழிகள் வழங்கப்பட்டது. இதனை பின்பற்றுவதாக 18 விவசாய சங்கங்கள் உறுதிமொழியை கொடுத்தன.
8.30 மணி அளவில் அவர்கள் சிங்கு எல்லையின் தடைகளை உடைத்து ட்ராக்டர்களிலும், குதிரைகளிலும், ட்ரோலிகளிலும் இரும்பு கம்பிகள், குச்சிகள் மற்றும் வாள்களை கொண்டு ஊர்வலம் வந்தனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதிகளை மீறி அவுட்டர் ரிங் ரோட்டில் அவர்கள் செல்ல விரும்பினர்.எச்சரிக்கை அறிவிப்புகள் செய்யப்பட்ட போதும் அவர்கள் காவல்துறையினரை கத்தி மற்றும் லத்திகள் கொண்டு தாக்கி கலவரத்தை துவங்கினர். காவல்துறையினரை கொல்லும் நோக்கில் அவர்கள் மீது ட்ராக்டர்களை ஓட்டினர் என்று குமார் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டக்காரர்கள் மற்றும் தலைவர்கள் குறிப்பிட்ட பாதையில் குறிப்பிட்ட நேரத்தில் செல்லக் கூடாது என்ற முன்முடிவுடன் “அணிவகுப்பு” என்ற பெயரில் குடியரசு தின அணிவகுப்பை சீர்குலைக்க முயன்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக விவசாய சங்க தலைவர்களிடம் கேட்ட போது, அவர்கள் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்ட புகார்களை மறுத்துள்ளனர். நான் சிங்கு எல்லையை தாண்டவில்லை. இந்த வன்முறையை நான் கண்டிக்கின்றேன். காவல்துறை பரிந்துரை செய்த பாதை எனக்கு திருப்தி அளித்தது. காவல்துறையினர் என் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளனர் என்று ஜம்ஹாரி கிஷான் சபையின் குல்வந்த் சிங் சந்து குறிப்பிட்டார்.
நான் சிங்கு எல்லையில் தான் இருந்தேன். காவல்துறையினர் காட்டிய வழியை பயன்படுத்தினேன். நான் யாரையும் எங்கும் செல்லுங்கள் என்று கூறவில்லை. அமைதியான ஊர்வலத்தை வேண்டினேன். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு என்னிடம் பேசி, இந்த கேள்விகளை கேட்டிருக்க வேண்டும் என்று நிர்பாய் சிங் தெரிவித்தார்.
To read this article in English
நான் அங்கே இருந்ததற்கான, போராட்டதை தூண்டியதற்கான ஆதாரத்தை காவல்துறை என்னிடம் காட்டினால் அவர்கள் தாராளமாக என்னை கைது செய்யலாம். நான் சஞ்சய் காந்தி ட்ரான்ஸ்போர்ட் நகரில் இருந்து எங்கும் செல்லவில்லை. சில இளைஞர்கள் எங்களுடன் இணைந்து டெல்லி வரை ஊர்வலம் சென்று திக்ரிக்கு திரும்பினோம் என்று ருல்து சிங் கூறினார்.
நான் எதையும் திட்டமிடவில்லை. வன்முறைகளுக்கு சதித்திட்டமும் தீட்டவில்லை. இந்த வன்முறையில் நான் எந்த் பங்கும் வகிக்கவில்லை. நான் காவல்துறை பரிந்துரைத்த வழிகளை நான் சிங்கு எல்லையில் இருந்தே பின்பற்றினேன். போராட்டதை சிலர் முடக்கி டெல்லியை நோக்கி நகர்ந்தால் ஒருவர் என்ன செய்ய முடியும், ”என்று மஜா கிசான் கமிட்டியின் பால்விந்தர் சிங் அவுலாக் கூறினார்.
மக்கள் உண்மையை விரைவில் காண்பார்கள். மற்றவர்கள் தான் விவசாயிகளை தூண்டினார்கள் நாங்கள் அல்ல. சிங்கு எல்லையில் இருந்து ஒரு டிராட்க்டரில் நான் அணிவகுப்பிற்கு சென்றேன். சில விவசாயிகள் என்னிடம் வந்து “எங்களுடன் சேர்ந்து செங்கோட்டைக்கு வரவும்” என்று கேட்டார்கள். அவர்களுக்கு வன்முறையில் இறங்க வேண்டும் என்று இருந்தது. ஆனால் நான் செய்யவில்லை. நான் திரும்பி வந்துவிட்டேன் என்று இந்திய விவசாய சங்கத்தின் சத்னம் சிங் பெரு தெரிவித்தார்.
இயக்கம் கச்சேரி ஒன்றும் இல்லை. முதல் தகவல் அறிக்கைகள், சிறைகள், துன்புறுத்தல்கள் எல்லாம் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று யோகேந்திர யாதவ் கூறினார்.
காவல்துறையினர், 10 மாவட்டங்களில் மொத்தமாக 25 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 19 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த வன்முறையில் தொடர்பில் இருந்த 50 பேரை தடுப்பு காவலில் வைத்திருப்பதாகவும் கூறினர். முக அடையாளம் காணும் முறையை பயன்படுத்தி குற்றவாளைகளை அடையாளம் காண முடிவு செய்துள்ளோம். வன்முறையில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க இயலாது. விவசாய சங்க தலைவர்களிடம் கேள்வி எழுப்பப்படும் என்றும் காவல்துறை ஆணையர் எஸ்.என். ஸ்ரீவஸ்தா கூறினார்.
ட்ராக்டர் ஊர்வலம் நடத்துவதற்காக 5 கட்ட பேச்சுவார்த்தைகள் விவசாய தாலைவர்களுடன் நடத்தப்பட்டது என்று ஸ்ரீவஸ்தா கூறினார். “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் ட்ராக்டர் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை பின்பற்றவில்லை என்றார்.
ஜனவர் 25ம் தேதி அன்று மாலை அவர்கள் தங்களின் வார்த்தைகளை பின்பற்ற மாட்டார்கள் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. போராட்ட கூறுகளை முன்வைத்தனர். அவர்கள் மேடைகளை ஆக்கிரமிப்பு செய்து கலவரத்தை கிளறும் வகையிலான உரைகளை ஆற்றினார்கள். அது அவர்களின் நோக்கத்தை தெளிவுப்படுத்தியது. ட்ராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையில் விவசாய தலைவர்களும் ஈடுபட்டனர். சத்னம் சிங் பன்னு மற்றும் தர்ஷன் பால் போன்றவர்கள் சில ஆத்திரமூட்டும் உரைகளை நிகழ்த்தினர். அதனைத்தொடர்ந்து தடுப்புகளை மீறி போராட்ட களத்தில் குதித்தனர் அவர்கள் என்று ஸ்ரீவஸ்தா கூறியுள்ளார்.
காவல்துறைக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. ஆனாலும் அமைதியாகவே இருந்தது. இந்த வன்முறையில் 394 காவலர்கள் காயம் அடைந்துள்ள்ளனர். 30 காவல்துறை வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐ.டி.ஓவில் நடைபெற்ற கலவரத்தில் சிக்கி நவரத் சிங் என்ற 27 வயது விவசாயி மரணம் அடைந்தார். டெல்லி காவல்துறையினர் ஐ.டி.ஓவில் நடைபெற்ற கலவரம் குறித்த முதல் தகவல் அறிக்கையில் ”நவ்ரத் சிங் ட்ராக்டரை மிகவும் வெறித்தனமாகவும் அலட்சியமாகவும் இயக்கி வந்தார். அது கவிழ்ந்த பிறகு, அவரை காப்பாற்ற பாதுகாப்பு படையினர் முயன்றனர். காவல்துறையினர் அவரை காப்பாற்ற முயன்ற போதும் மற்ற போராட்டக்காரர்கள் ட்ராக்டர்களுடன் அங்கே வந்து அவர்களின் வேலையை குறைக்க முயன்றனர்” என்றும் குறிப்ப்பிடப்பட்டுள்ளது.
புதன் கிழமை நகரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துணைநிலை ராணுவத்தினர் செங்கோட்டை, மத்திய டெல்லி மற்றும் போராட்டம் நடக்கும் இடங்களில் நிறுத்தப்பட்டனர்.
நிலைமையப் பற்றி அறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி காவல்துறை ஆணையர் ஸ்ரீவஸ்தா, புலனாய்வுத்துறை தலைவர் அரவிந்த் குமார் மற்றும் உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
கலகக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும், வன்முறையை தூண்டிய கலகக்காரர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் டெல்லி காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வன்முறை குறித்து டெல்லி காவல்துறை அமித் ஷாவிற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது.
"பேரணியில் இருந்த சிலரின் இத்தகைய வன்முறை செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது, மேலும் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை மூலம் ஒரு வலுவான செய்தி அனுப்பப்பட வேண்டும்" என்று ஒரு அதிகாரி கூறினார்.
உள்துறை துணை அமைச்சர் ஜி. கிஷான் ரெட்டி போராட்டக்காரர்களின் நடவடிக்கைகளை தேசத்துரோகம் என்று குறிப்பிட்டார். மேலும் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சுமத்தினார். குடியரசு தினத்தின் போது தேசிய நினைவு சின்னங்களை அவமதிப்பது சேத துரோகம். உடனடியாக கிளர்ச்சியை கட்டுபடுத்த நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறைக்கு தலை வணங்குகிறேன். முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் சட்டத்தினை எதிர்கொள்வார்கள். காங்கிரஸ் கட்சியின் அரசியல் மீண்டும் அம்பலமானது என்று அமித் ஷாவை சந்தித்த சிறிது நேரத்திலேயே ட்வீட் ஒன்றை வெளியிட்டார்.
With Deeptiman Tiwary, New Delhi
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.