Srinagar News : ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டு 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் மற்றொரு நபர், ஓல்ட் சிட்டி பகுதியில் திங்கள் கிழமை மாலை கலவரக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
45 வயது மதிக்கத்தக்க முகமது இப்ராஹிம் கான் என்ற நபர் போரி கடல் என்ற பகுதியில் அமைந்திருக்கும் காஷ்மீர் பண்டிட் ஒருவருக்கு சொந்தமான மளிகைக் கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். அவர் மீது நேற்று மாலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. வயிறு மற்றும் மார்புப் பகுதிகளில் துப்பாக்கிச்சூடு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இப்ராஹிம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஸ்ரீநகரில் மிகவும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையிலும் 24 மணி நேரத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் பொதுமக்கள் மீதும், புலம் பெயர் தொழிலாளர்கள் மீதும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து ஸ்ரீநகரில் பாதுகாப்புகளும், பாதுகாப்பு சோதனைகளும் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரோஷன் லால் மாவா என்ற காஷ்மீர் பண்டிதர் 90களில் ஏற்பட்ட கலவரத்தின் விளைவாக டெல்லிக்கு இடம் பெயர்ந்தார். பிறகு 2019ம் ஆண்டு தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பி வந்த மாவா தன்னுடைய மளிகைகக் கடையை துவங்கி நடத்தி வந்தார். அந்த கடையில் தான் அஷிங்கூ கிராமத்தை சேர்ந்த கான் பணியாற்றி வந்தார்.
காவல்துறையின் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “தீவிரவாதிகள் சிவிலியன் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயங்களால் பாதிக்கப்பட்ட அந்நபர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபப்ட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழக்க நேரிட்டது” என்று கூறப்பட்டுள்ளது. ஞாயிறு அன்று பதமலூர் பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.
உள்ளூர் காஷ்மீர் பண்டிட் மற்றும் பிகார் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் அக்டோபர் மாதம் 5ம் தேதி அன்று கொல்லப்பட்ட நிலையில் கடந்த மாதத்தில் இருந்து ஸ்ரீநகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் கொல்லப்பட்ட பிறகு பள்ளி முதல்வர் ஒருவர் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவருடன் பணியாற்றின ஆசிரியர் ஒருவர் இரண்டு நாட்கள் கழிட்து கொல்லப்பட்டார். அக்டோபர் 16ம் தேதி அன்று புலம்பெயர் வியாபாரி ஒருவர் ஸ்ரீநகரின் எடிகா பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil