"அயோத்தியில் ராமர் கோவிலை தவிர வேறு எதுவும் கட்டப்பட மாட்டாது”, என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் உறுதிபட தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பாக, மூன்று நாட்கள் நடைபெறும் தர்ம சன்ஸாத் (இந்து மத) மாநாடு துவங்கியது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், “ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் மட்டுமே கட்டப்படும். வேறு எதுவும் கட்டப்படாது. ராமர் கோவிலுக்காக 20-25 ஆண்டுகளுக்கு முன்பு போராடியவர்களாலேயே கட்டப்படும். அதே கற்களால் கட்டப்படும். இது பிரபலமான அறிவிப்பு கிடையாது. இது நம்முடைய மனதின் வெளிப்பாடு. நம்பிக்கை சார்ந்தது. இது மாறாது”, என கூறினார். மேலும், ராமர் கோவிலை கட்டுவதற்கான உகந்த சூழ்நிலை நிலவுவதாக தெரிவித்த மோகன் பாகவத், அதற்கான நேரம் வெகு அருகிலேயே இருப்பதாகவும் கூறினார்.
“ராமர் கோவில் குறித்து மற்றவர்கள் கேள்வி எழுப்பும்போது என்னால் தீர்க்கமான பதிலை தர முடியாது. ஏனென்றால், என்னால் எதிர்காலத்தை கணிக்க முடியாது. 1990-ல் இது இன்னும் 20-30 ஆண்டுகளில் நிகழலாம் என பாலாசாஹீப் தெரிவித்தார். 2010-ல் 20 ஆண்டுகள் ஆகலாம் என தெரிந்தது. 2020-ஆம் ஆண்டில் இன்னும் 30 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், இதற்கான முயற்சி வீண்போகாது. அதற்கான நேரம் நெருங்கிவிட்டது. அதற்கான முயற்சிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும்”, என கூறினார்.
“இந்து மக்களின் எதிர்காலத்திற்காக நாம் அயோத்தியில் ராமர் கோவிலை எழுப்புவதை மட்டுமே நம் மனதில் குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும். வேறு எதையும் வைத்திருக்கக் கூடாது.”, எனவும் மோகன் பாகவத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா, “அயோத்தியாவில் ராமர் கோவில் கட்ட வேண்டும். இந்தியாவில் ராம ராஜ்ஜியத்தை அமைக்க வேண்டும்”, என தெரிவித்தார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தின் உரிமை தொடர்பாக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் பேச்சுவார்த்தை மூலமாக முடிவெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு ராமர் கோவில் நிச்சயம் கட்டப்படும் என, மோகன் பாகவத் கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.