அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ் 2.95 கோடி வீடுகளை மார்ச் 2024க்குள் கட்டும் நோக்கத்தில், சுமார் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 1.44 லட்சம் வீடுகள் ஒதுக்கீட்டை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. ஜூன் 30 ஆம் தேதிக்குள் வீடுகளை அனுமதிக்கத் தவறிய நிலையில், கூடுதல் ஒதுக்கீடாக உத்தரப் பிரதேசத்திற்கு இவை வழங்கப்பட்டுள்ளது.
பி.எம் ஆயாஸ் யோஜனா திட்டத்தின் பொறுப்பில் இருக்கும் ஊரக வளர்ச்சி அமைச்சகம், கிராமப்புற வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு கீழ்நோக்கி திருத்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதைத் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு திட்டத்தை திரும்பப் பெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பின்வருமாறு:-
குஜராத், திரிபுரா, ஒடிசா, சிக்கிம், மேகாலயா, மகாராஷ்டிரா, அசாம், நாகாலாந்து, மிசோரம், தமிழ்நாடு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், லடாக், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கேரளா, ஜார்கண்ட் , பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசம்.
2024 மார்ச்சுக்குள் 2.95 கோடி வீடுகளை கட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 2.95 கோடி வீடுகளில் 2.04 கோடி சமூக-பொருளாதார ஜாதிக் கணக்கெடுப்பு (SECC) தரவுகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும், மீதமுள்ள 91 லட்சம் வீடுகள் நாடு முழுவதும் ஜூன் 2018 முதல் மார்ச் 2019 வரை நடத்தப்பட்ட ஆவாஸ்+ என்ற கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது.
இருப்பினும், இந்த மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் சேர்ந்து மொத்தம் 1,44,220 வீடுகளுக்கு - SECC தரவுகளிலிருந்து 7,496 மற்றும் ஆவாஸ்+ பட்டியலில் இருந்து 1,36,724 - ஜூன் 30 ஆம் தேதிக்குள் அனுமதியளிக்கத் தவறிவிட்டன.
மறுபுறம், முதலில் 34.72 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்ட உத்தரபிரதேசம், கூடுதல் வீடுகளுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரியது. இது தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கடிதம் எழுதியுள்ளார். முதற்கட்ட ஒதுக்கீட்டில், உத்தரபிரதேசத்தில் 29.82 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை கட்டுமானத்தில் உள்ளன. இப்போது, மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 1,44,220 வீடுகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியான குடும்பங்களுக்கு கூடுதல் வீடுகளை வழங்க உத்தரபிரதேச அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாமவுரியா, கூடுதல் ஒதுக்கீடு தொடர்பாக மையத்திடம் இருந்து கடிதம் வந்ததை உறுதிப்படுத்தினார். இருப்பினும், தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் வீடுகள் வழங்க, மாநிலத்திற்கு மேலும் 95,000 வீடுகள் தேவைப்படும் என்றார்.
முன்னதாக, தகுதியான பயனாளிகளுக்கு 100 சதவீத வீடுகளை மாநிலங்கள் அனுமதிக்க வேண்டும் என்று டிசம்பர் 31, 2022 அன்று மத்திய அரசு காலக்கெடு விதித்தது. காலக்கெடு பின்னர் ஜனவரி 16, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. இதன்பின்னர் பிப்ரவரி 17, மார்ச் 31 மற்றும் இறுதியாக ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.
ஜூன் 30 காலக்கெடு முடிவடைந்ததால், இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 1,44,220 வீடுகள் என்ற அனுமதிக்கப்படாத இலக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், கர்நாடகா, ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகியவை "சிறப்பு சூழ்நிலைகள்" காரணமாக ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. மாத இறுதிக்குள் அவர்கள் இலக்கை அடையத் தவறினால், அங்கீகரிக்கப்படாத வீடுகள் ஒதுக்கீடு சிறப்பாக செயல்படும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒப்படைக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் இணையதளத்தில் உள்ள தரவுகளின்படி, ஜூலை 17 வரை 2.93 கோடி வீடுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கியதில், 2.90 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது, அதில் 2.31 கோடி முடிக்கப்பட்டுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.