DA For Central Govt Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (டி.ஏ) மத்திய அரசு புதன்கிழமை தற்போதுள்ள 12 சதவீதத்திலிருந்து மேலும் 5 சதவீதம் உயர்த்தியுள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை மத்திய அரசு ஊழியர்களுக்கான தீபாவளி பரிசு என்று அழைத்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் மத்திய அரசு கருவூலத்திற்கு கிட்டத்தட்ட ரூ.16,000 கோடி செலவாகும் என்று கூறினார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கம் ஒரே நேரத்தில் அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தியிருப்பதுவே இதுவரையிலான உச்சபட்ச என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
இந்த அறிவிப்பு பற்றி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் பல முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி அவர்களுடைய அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.
டெல்லியில் சாஸ்திரிபவனில் நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டில் பிரகாஷ் ஜவடேகர், “ஜம்மு காஷ்மீர் தவிர பிற பகுதிகளில் குடியேறியவர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து வந்து குடியேறிய 5300 குடும்பங்கள், பிறகு பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு வந்த குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குப் பிறகு, 2019 நவம்பர் 30 ஆம் தேதி வரை இந்த சலுகைகளை வழங்குவதற்கு ஆதார் பதிவு கட்டாயம் தேவை என்பதை தளர்த்த அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.