இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மிக்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் மும்பையில் வசித்து வருகின்றனர். இதனிடையே மும்பையில் உள்ள முகேஷ் அம்பானிக்கு சொந்தமான அறக்கட்டளை மருத்துவமனைக்கு கால் செய்த மர்மநபர் ஒருவர் முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் மருத்துவமனையின் ஹெல்ப்லைன் எண்ணுக்கு பல மிரட்டல் அழைப்புகள் வந்தன. இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இது தொடர்பாக டிபி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.
மேலும் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவாகரம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில், மும்பையின் தாஹிசரில் இருந்து ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சமீப காலமாக இந்தியாவில் பிரபலங்கள் பலருக்கும் இது போன்ற மிரட்டல் கால்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், முகேஷ் அம்பானிக்கு வந்த இந்த மிரட்டல் கால்கள் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், முகேஷ் அம்பானியின் அதிகாரப்பூர்வ இல்லமான ஆன்டிலியாவுக்கு அருகில் ஜெலட்டின் நிறைந்த ஸ்கார்பியோ கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வாகனத்தின் உரிமையாளர் மன்சுக் ஹிரென் பின்னர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்ட உடனேயே, சச்சின் வாஸ், சுனில் மானே மற்றும் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் பிரதீப் சர்மா உட்பட பல போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”