கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் கோவிலை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அங்கு மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்து கோயில் மீதான தாக்குதல் சம்பவம் மிகுந்த கவலை அளிக்கிறது என்று கூறினார்.
"கனடாவில் உள்ள இந்து கோவிலில் நேற்று நடந்த தாக்குதல் சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது... எங்கள் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரின் அறிக்கையையும், நேற்றைய நமது பிரதமரின் கவலையின் வெளிப்பாட்டையும் நீங்கள் பார்த்திருக்க முடியும்.
இதைப் பற்றி நாங்கள் எவ்வளவு ஆழமாக உணர்கிறோம் என்பதை இது உங்களுக்குத் தெரிவிக்கும், ”என்று ஜெய்சங்கர் ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையில் பேசியபோது கூறினார்.
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசாங்கத்தின் "சாத்தியமான" ஈடுபாடு இருப்பதாகக் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டிய பின் இந்தியா கனடாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: கனடாவில் உள்ள இந்து கோவிலை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதேபோன்று நமது அதிகாரிகளை மிரட்டுவது கோழைத்தனமானது. இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா மந்திருடன் இணைந்து இந்திய தூதரகம் பாஸ்போர்ட் மற்றும் OCI அட்டைகள் போன்ற ஆவணங்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முகாம் ஏற்பாடு செய்திருந்தது. அப்போது இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
சமூக ஊடகங்களில் உள்ள வீடியோவில் போராட்டக்காரர்கள் காலிஸ்தான் கொடிகளை ஏந்தியதைக் காட்டியது.
டொராண்டோ ஸ்டார் பத்திரிகையின் அறிக்கையின்படி, காலிஸ்தானுக்கு ஆதரவாக வாதிடும் தடைசெய்யப்பட்ட குழுவான நீதிக்கான சீக்கியர்கள் குழு, இந்திய தூதரக அதிகாரிகளின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு செய்ததாக கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“