தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாக்குறுதியை நிறைவேற்றுகிறதா? டெல்லி சொல்லும் உண்மை

இயற்கை குறித்து முறையான விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுகின்றதா மாநில அரசுகள்?

டெல்லியில் ஏற்கனவே 14,000 மரங்களை பாதுகாக்க போராட்டங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், 4800 மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. டெல்லியின் வளர்ச்சிக்காக உருவாக்கப்படும் 3 புதிய திட்டங்களுக்காக அம்மரங்கள் வெட்டப்பட்டிருப்பதாக தகவல் அளித்திருக்கின்றார்கள். டெல்லியில் புதிதாக 48,000 மரங்கள் நட்டு, டெல்லியின் சுற்றுச் சூழலை பாதுக்காக்க விரும்பி ஒரு திட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அதில் வெறும் 2000 மரங்கள் மட்டுமே நடப்பட்டிருக்கின்றது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், டெல்லி மீரட் சாலையை விரிவுப்படுத்துவதற்காக 3,261 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வாங்கியது.  அந்த இழப்பினை ஈடு செய்வதற்காக ரூபாய் 22.8 கோடி செலவில், துக்லகபாத் பகுதியில் இருக்கும் பல்லுயிர் பூங்காவில் 40,000 மரங்களை நடுவதற்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் வெறும் 5% மரங்கள் மட்டுமே நடப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது.

டெல்லியின் சுந்தர் நகரை விரிவுப்படுத்துவதற்காக, ப்ரகதி மைதானம் அருகே இருக்கும்  ‘இந்தியா ட்ரேட் ப்ரோமசன் காம்ப்ளக்ஸ்’ பகுதியில் 82 மரங்கள் வெட்டப்படுவதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றார்கள். இந்நிலையில் 1,713 மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. அதனை ஈடுகட்ட 17, 000 மரங்கள் நடுகின்றோம் என்று கூறினார்கள். ஆனால் அதற்கான நிலத்தினை டெல்லி வளர்ச்சித்துறை இன்னும் சம்பந்தபட்டவர்களுக்குத் தரவில்லை. யமுனை நதிக்கரையில் இருக்கும் இரு முக்கியமான பகுதிகளை வனத்துறையினருக்கு அளிப்பதாக கூறி அதனை இன்னும் தராமல் கால தாமதம் செய்து வருகின்றார்கள்.

இதன் அருகிலேயே மூன்றாவது திட்டத்திற்கான மர இழப்பீடுகளை ஈடு செய்ய இடம் ஒதுக்கியிருக்கின்றது டெல்லி நகர் வளர்ச்சித் துறை. டெல்லி – கூர்கன் சாலையை விரிவுப்படுத்துவதற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் புதிய மரங்களை நட 19.52 ஹெக்டர் பரப்பளவில் புதிய நிலங்கள் தரப்பட்டிருக்கின்றன.

ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ் இது குறித்து குறிப்பிடுகையில் “டெல்லி வளர்ச்சித் துறை, தங்களால் எவ்வளவு விரைவாக நிலங்களை வனத்துறையினருக்கு தர இயலுமோ அவ்வளவு விரைவில் கொடுத்தால் நல்லது” என்று கூறியிருக்கின்றார்.

எட்டுவழிச் சாலை

தமிழகத்தில் சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை அமைப்பதிற்காக 1900 ஹெக்டெர் நிலப்பரப்பு தேவைப்படுகின்றது. அதில் 16% நிலம் விவசாய நிலம், இடையில் 120 ஹெக்டெர் நிலப்பரப்பு காடுகளையும் கையகப்படுத்தி இருக்கின்றது தமிழக அரசு. இத்திட்டத்திற்காக மொத்தம் 6000 மரங்கள் வெட்டப்பட இருக்கின்றன. மேலும் பாதுகாக்கப்பட்ட வனங்கள் எட்டின் வழியாக இச்சாலைகள் போடப்படுவதால் வன உயிரனங்கள், நீராதாராங்கள் ஆகியவற்றை இழக்க நேரிடும் என்ற இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்திருக்கின்றார்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close