டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் (AAP) 7 சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் ஒரே காரணங்களைக் கூறி கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்: "கட்சியில் வளர்ந்து வரும் ஊழல்" மற்றும் கட்சி நிறுவப்பட்ட "மதிப்பு மற்றும் கொள்கைகளில் இருந்து விலகல்".
ஆங்கிலத்தில் படிக்க: Delhi Assembly Elections: Denied tickets, 7 AAP MLAs quit party, blame ‘corruption’
7 பேரும் வெளியேறும் எம்.எல்.ஏ.,க்கள் என்பதால் அவர்களுக்கு இந்த முறை டிக்கெட் வழங்கப்படவில்லை.
பாலம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து பாவ்னா கவுர், பிஜ்வாசனில் இருந்து பூபிந்தர் சிங் ஜூன், ஆதர்ஷ் நகரிலிருந்து பவன் சர்மா, கஸ்தூரிபா நகரிலிருந்து மதன் லால், ஜனக்புரியிலிருந்து ராஜேஷ் ரிஷி, திரிலோக்புரியிலிருந்து ரோஹித் குமார் மெஹ்ரோலியா மற்றும் மெஹ்ராலி தொகுதியிலிருந்து நரேஷ் யாதவ் ஆகிய ஏழு பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டு குரான் அவமதிப்பு வழக்கில் பஞ்சாப் நீதிமன்றத்தால் மெஹ்ராலி தொகுதியின் நரேஷ் யாதவ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனை நவம்பர் மாதம் விதிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்ட போதிலும் ஆம் ஆத்மி கட்சி அவரை வேட்பாளராக அறிவித்திருந்த நிலையில், டிசம்பரில் கட்சி தனது எண்ணத்தை மாற்றி அவருக்குப் பதிலாக மகேந்தர் சவுத்ரியை களமிறக்கியது.
ரமேஷ் பெஹல்வான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கஸ்தூரிபா நகர் எம்.எல்.ஏ மதன் லால், "அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கட்சி மீது நம்பிக்கை இழந்துவிட்டேன்... டில்லியில் ஊழலை ஒழிப்போம் என்ற வாக்குறுதியில் உருவாக்கப்பட்ட கட்சி இன்று ஊழலைச் செய்கிறது... நாங்கள் ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. ஒரு நாள்... நாங்கள் ஏழு பேரும் எங்களுக்குள் விவாதித்து, இது சரியான நேரம் என்று நாங்கள் நினைத்ததால் இன்று ராஜினாமா செய்ய முடிவு செய்தோம்,” என்று கூறினார்.
அவர்கள் 7 பேரும் விரைவில் பா.ஜ.க.,வில் சேரத் தயாராக இருப்பதாகவும் மதன் லால் கூறினார்.
"காங்கிரஸில் சேர்வதில் எந்த அர்த்தமும் இல்லை... பா.ஜ.க எங்களை மரியாதையுடனும் கவுரவத்துடனும் அழைத்தால், நாங்கள் சேரலாம்," என்று மதன் லால் கூறினார்.
வரும் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி சீட்டு கொடுக்காதது தான் அவர்கள் ராஜினாமாவுக்கு காரணமா என்ற கேள்விக்கு, “தங்கள் தொகுதிக்காக உழைத்தவர்களை கட்சி நீக்கியதும் ஒரு காரணம் என்று சொல்லலாம் ஆனால் கிரிமினல் பின்னணி மற்றும் அவர்களுக்கு எதிராக பல எஃப்.ஐ.ஆர்.,கள் உள்ள வேட்பாளர்களுக்கு டிக்கெட் கொடுத்தது... கட்சி 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை நீக்கிவிட்டது, புதிய வேட்பாளர்கள் சரியாக செயல்படவில்லை, ஆனால் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்... அவர்கள் சீட்டுக்கு பணம் வாங்கினர்... ஊழல் செய்யும் கட்சியில் நாங்கள் இருக்க விரும்பவில்லை. கட்சி அதன் அரசியல் லட்சியத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறது, மக்களைப் பற்றி அல்ல,” என்று மதன் லால் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், கட்சி தொடங்கியதில் இருந்தே கட்சியில் இருந்து வரும் மதன் லால், உங்கள் மீதும் கட்சி மீதும் நம்பிக்கை இழந்துவிட்டதால், ஆம் ஆத்மி கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “ஆட்சிக்கு எதிரான மனநிலை காரணமாக திலீப் பாண்டே, ராம் நிவாஸ் கோயல் போன்ற மூத்த உறுப்பினர்களுடன் கட்சி இந்த 7 எம்.எல்.ஏ.,க்களையும் மற்றவர்களையும் நீக்கியது” என்றார்.
"வளர்ந்து வரும் ஊழல்" அல்லது "கட்சியின் முக்கிய மதிப்புகளிலிருந்து விலகுதல்" ஆகியவற்றைக் காரணம் காட்டி, 2024 ஆம் ஆண்டில், முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பால் கௌதம், கைலாஷ் கஹ்லோட் மற்றும் ராஜ் குமார் ஆனந்த் மற்றும் சத்தர்பூர் எம்.எல்.ஏ கர்தார் சிங் தன்வார் ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறினர்.
கௌதம் காங்கிரஸில் இணைந்தார், ஆனந்த், கஹ்லோட் மற்றும் தன்வார் ஆகியோர் பா.ஜ.க.,வில் இணைந்தனர் மற்றும் முறையே கரோல் பாக், பிஜ்வாசன் மற்றும் சத்தர்பூர் ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க சீட்டில் போட்டியிடுகின்றனர்.