அண்ணாமலை நடை பயணத்தால் தி.மு.க. கலக்கம்; மக்களவையில் தயாநிதி எம்.பி. எதிர்ப்புக்கு அமித்ஷா பதில்
தமிழ்நாட்டில் அண்ணாமலை நடத்தி வரும் நடை பயணத்தால் தி.மு.க. கலக்கமடைந்துள்ளது என்று மக்களவையில் அமித்ஷா பேசியது, தி.மு.க.வினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அண்ணாமலை நடத்தி வரும் நடை பயணத்தால் தி.மு.க. கலக்கமடைந்துள்ளது என்று மக்களவையில் அமித்ஷா பேசியது, தி.மு.க.வினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில், டெல்லி சேவைகள் மசோதா கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக. 1) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
Advertisment
இந்த மசோதா வியாழக்கிழமை (ஆக.3) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய அமித்ஷா, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மத்திய அரசுக்கு இதற்கான சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது. இது உச்சநீதிமன்ற தீர்ப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரத்திற்கு வரும்வரை டெல்லி மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே சுமூகமான உறவு இருந்தது.
அக்கட்சிக்கு அதிகாரிகள் பணியிட மாற்றம் பிரச்சினையில்லை. அவர்களுக்கு பிரச்சினை என்னவென்றால், அவர்களின் ஊழலை மறைக்க ஊழல் கண்காணிப்புத் துறையை தங்களின் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாவில்லை என்பதே.
Advertisment
Advertisements
பங்களா ஊழல் பகிரங்கமாவதில் அவர்களுக்குப் பிரச்சினை. டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவதை அம்பேத்கர், ராஜேந்திர பிரசாத், ராஜகோபாலாச்சாரி, நேரு என பல தலைவர்களும் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த மசோதா நிறைவேறியவுடன் இண்டியா கூட்டணிக்கு கேஜ்ரிவால் குட் பை சொல்வார், என்றார்.
இதனை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக குற்றம்சாட்டினர்.
அப்போது பேசிய தயாநிதி மாறன், ’தமிழ்நாடு ஆளுநர் 13 மசோதாக்களை நிலுவையில் வைத்து மாநில அரசுக்கு எதிராக செயல்படுகிறார். எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் நேர்மையாக செயல்படும். சில மாநிலங்களில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துள்ளது, என்றார்.
இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதற்கு பதலளித்த அமித்ஷா, ‘கெஜ்ரிவால் அரசு விதிகளுக்கு உட்பட்டு செயல்படவில்லை. சட்டப்பேரவையை கூட முறையாக கூட்டுவதில்லை. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி விட்டால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குலையும்.
தமிழ்நாட்டில் அண்ணாமலை நடத்தி வரும் நடை பயணத்தால் தி.மு.க. கலக்கமடைந்துள்ளது. அதுவே தயாநிதி மாறனின் உரையில் எதிரொலித்ததது’ என்று பேசினார்.
அரசின் வாதங்களை ஏற்காத சில எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளியேறின. இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் டெல்லி அதிகாரிகள் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே சில ஆவணங்களை ஆம்ஆத்மி உறுப்பினர் சுஷில் குமார் ரிங்கு கிழித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி வீசினார். இதற்காக அவரை அவையிலிருந்து இந்த தொடர் முழுவதும் நீக்கி சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லி மசோதாவை நிறைவேற்ற அமித் ஷா மக்களவையில் கூறிய காரணங்களில் ஒன்றுகூட பொருத்தமானது அல்ல. அவர்கள் செய்வது தவறு என்று அவர்களுக்கே தெரியும். அவர்கள் டெல்லி மக்களை அடிமையாக்கும் நோக்கில் இதனைச் செய்கிறார்கள். இந்த சட்ட மசோதா அவர்களை டெல்லி மக்களவை நிற்கதியாக்கும். இதை இண்டியா கூட்டணி அனுமதிக்காது" என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“