டெல்லி மதுபானக் கொள்கை முறைகேட்டிற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மூளையாக செயல்பட்டவர் என்று கூறி, அவர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் பா.ஜ.க நேற்று (புதன்கிழமை) 15 முக்கிய சாலை சந்திப்புகளில் போராட்டம் நடத்தியது.
அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ராஜினாமாவை குறிப்பிட்டு இது "உண்மை மற்றும் மக்களுக்கு கிடைத்த வெற்றி" என்று கூறிய பா.ஜ.க தலைவர்கள், நேற்று ஆம் ஆத்மி தலைவர் மீது கவனத்தை திருப்பியது.
பா.ஜ.க செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா, எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதுரி, பைஜயந்த் பாண்டா மற்றும் நிர்வாகிகள் உள்பட சுமார் 50 பேர் ஐ.டி.ஓ சாலை சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது சச்தேவா கூறுகையில், " சிசோடியாவின் மனுவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, அவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கவில்லை. சிசோடியா சத்யேந்தர் ஜெயின் ராஜினாமாவை முதல்வர் ஏற்றுக் கொண்டார்.
அவர்கள் அதிஷி, சௌரப் பரத்வாஜ் என யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். சீட்டுக் கட்டில் 52 அட்டைகள் இருப்பது போல் இந்தத் தலைவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள். ஒரே அட்டையைச் சேர்ந்தவர்கள் என்று குற்றஞ்சாட்டினார். ஒட்டுமொத்த கட்சியினரும் ஊழல்வாதிகள், தார்மீக அடிப்படையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பிதுரி பேசுகையில், "ஆம் ஆத்மி அமைச்சர் 9 மாதங்களாக ஏன் பதவி விலகவில்லை. ஏன் இப்போது திடீரென சிசோடியா மற்றும் ஜெயின் ராஜினாமா செய்தனர்? இது ஒரு சதித்திட்டத்தை தெளிவாகக் காட்டுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் மதுபானக் கொள்கை ஊழலை வீடு வீடாகச் சென்று மக்களிடம் தெரிவிப்போம்" என்று கூறினார்.
மேலும், "இவர்கள் ஆயிரக்கணக்கான கோடி சம்பாதிப்பதற்காகவும், மோசடி செய்யவும், இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள். கெஜ்ரிவால் ராஜினாமா செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்று பிதுரி கூறினார்.
தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமையும் போராட்டம் தொடரும் என பா.ஜ.க அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/