Delhi CM Arvind Kejriwal: டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, இளைஞர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் பிரதமர் மோடி, பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷா இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த கெஜ்ரிவால், காரம்பூரா பகுதியில், டெல்லி தெற்கு தொகுதி வேட்பாளர் ராகவ் சத்தாவை ஆதரித்து பிரசாரம் செய்தவாறு வாகனத்தில் சென்றார். அப்போது வாகனத்தின் முன்பகுதியில் ஏறிய இளைஞர், கெஜ்ரிவாலின் கன்னத்தில் அறைந்தார். அங்கு குழுமியிருந்த கட்சி தொண்டர்கள், அந்த இளைஞரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
அந்த இளைஞன் 29 வயதான சுரேஷ் சவுஹான் கடியாலோகர் என்றும், அவர் ஆம் ஆத்மி ஆதரவாளர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. உயர்மட்ட விசாரணைக்கு டிசிபி உத்தரவிட்டிருப்பதாக, டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி மறுப்பு : டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இத்தாக்குதல் குறித்து கூறியுள்ளதாவது, டெல்லி தெற்கு தொகுதியில், பா.ஜ.வின் மீனாட்சி லேகி, காங்கிரசின் அஜய் மாக்கானிற்கு கடும் போட்டியாக தங்கள் கட்சியின் ராகவ் சத்தா திகழ்கிறார். தாக்குதல் நடத்திய நபர், ஆம் ஆத்மியை சேர்ந்தவரல்ல.
பிரதமர் மோடி, பா.ஜ. தலைவர் அமித் ஷாவால், கடந்த 5 ஆண்டுகளில் அரவிந்த கெஜ்ரிவாலை ஒன்றும் செய்ய முடியவில்லை. தற்போது அவர் கெஜ்ரிவாலை கொல்ல துணிந்து விட்டனர். பிரதமர் மோடி- அமித் ஷா, டெல்லி போலீசுடன் இணைந்து இந்த தாக்குதலை நிகழ்த்தியிருப்பதாக சிசோடியா கூறினார்.
திட்டமிட்ட நாடகம் : ஆம் ஆத்மி கட்சியே திட்டமிட்டு, இதுபோன்ற செயல்களை அரங்கேற்றி மக்களிடம் அனுதாப ஓட்டுகளை பெற முயற்சிப்பதாக பா.ஜ. மாநில தலைவர் மனோஜ் திவாரி, டில்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜேந்தர் குப்தா தெரிவித்துள்ளனர்.
தலைவர்கள் கண்டனம் : டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளனர்.