உத்தரபிரதேச முன்னாள் முதல்வர், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவர் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் 'குரூப் டி' பணிகளில் பலர் 2004-09 காலகட்டத்தில் நியமிக்கப்பட்டனர். அதற்கு பதிலாக அவர்களது நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பண மோசடி வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த சில மாதங்களாக லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மகள்கள் மிசா பாரதி எம்.பி., சந்தா, ராகிணி ஆகியோரின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான அமித் கத்யாலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் அண்மையில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
லாலு பிரசாத் யாதவ் மற்றும் பிற குற்றவாளிகளுக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை கடந்த மாதம் 6 ஆம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 38 வேட்பாளர்கள் உள்பட 78 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரியின் அனுமதிக்காக காத்திருப்பதாக சி.பி.ஐ நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதையடுத்து, இந்த வழக்கு கடந்த மாதம் 18 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்று (அக். 7ம் தேதி) கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ், மிசா பாரதி உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகினர். இதையடுத்து, அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம் பிணை தொகையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது அவர்களை கைது செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பதிலளித்த ஆர்.ஜே.டி தலைவர் லாலு யாதவ், செய்தியாளர்களிடம் பேசுகையில், “நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது." என்று கூறியுள்ளார். அவரது மகன் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், “நாங்கள் நீதித்துறையை நம்புகிறோம், நீதிமன்றம் இன்று எங்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. அவர்கள் பெரும்பாலும் அரசியல் சதியில் ஈடுபடுகிறார்கள், மேலும் ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். வழக்கில் எந்த தகுதியும் இல்லை, எங்கள் வெற்றி உறுதியானது." என்று கூறியுள்ளார்.
முன்னதாக இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சி.பி.ஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்தது. 2014 ஆம் ஆண்டு ராப்ரி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் ஏ.கே இன்ஃபோசிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு ரூ.1.77 கோடி மதிப்பிலான நிலம் இருந்தபோது, ஒரு பங்குக்கு ரூ.10 என்ற விலையில், வெறும் ரூ.1 லட்சத்துக்கு ஏ.கே. இன்ஃபோசிஸ்டம்ஸைக் கைப்பற்றியதாக சி.பி.ஐ குற்றம் சாட்டியது.
சி.பி.ஐயின் முதல் குற்றப்பத்திரிகையின்படி, லாலு மீதான வருமான வரித்துறை ரெய்டுக்கு சமமாக அந்த நிறுவனம், 2017ல், “திடீரென்று” ரூ.1.35 கோடியை விளம்பரதாரர் இயக்குனருக்கு திருப்பிச் செலுத்தியது என்று குறிப்பிட்டுள்ளது. லாலுவின் குடும்பம் ஒரு லட்சம் சதுர அடிக்கு மேல் நிலத்தை 26 லட்ச ரூபாய்க்கு வாங்கியது அப்போதைய சர்க்கிள் ரேட் நிலத்தின் மொத்த மதிப்பு 4.39 கோடி ரூபாய் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“