தலைநகர் டெல்லியிலும் ஊடுருவியது ஒமிக்ரான்…பாதிப்பு 5 ஆக உயர்வு

கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை தொடர்ந்து தலைநகர் டெல்லியிலும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியான நிலையில், இன்று டெல்லியில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தான்சனியா நாட்டிலிருந்து டெல்லி திரும்பிய அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதியானது. தற்போது அவர், எல்என்ஜேபி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனையில் 17 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம், இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒமிக்ரான் உறுதியான 33 வயதான நபர், தென் ஆப்பிரிக்காவில் இருந்து துபாய் மற்றும் டெல்லி வழியாக மும்பை வந்துள்ளார். அதே போல், இரண்டாவது நபர் 72 வயதான என்ஆர்ஐ, ஜிம்பாபவேயிலிருந்து குஜராத்திற்கு வந்திருந்தார். இருவருக்கும் லேசான கொரோனா அறிகுறிகள் தான் இருந்துள்ளது.

இவர்களில் 33 வயதான நபர் எந்த தடுப்பூசியும் எடுத்துகொள்ளவில்லை என்றும், 72 வயதான நபர் சீனாவில் உருவாக்கப்பட்ட சினோவாக் தடுப்பூசியின் முதல் டோஸை மட்டும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் வந்திறங்கிய 72 வயதான நபருக்கும், அவரது மனைவிக்கும் நவம்பர் 30 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர், மரபணு வரிசை பரிசோதனை செய்ததில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. முதலில் அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருந்தது. தற்போது, அவருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என ஜாம்நகர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகாராஷ்டிர மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பிரதீப் வியாஸ் கூறுகையில், ஒமிக்ரான் பாதிப்புக்குள்ளான நபர், நவம்பர் 24 ஆம் தேதி இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவருக்கு காய்ச்சல் இருந்தது. தற்போது, எவ்வித அறிகுறிகளும் இல்லை. தனிமைப்படுத்தல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பிலிருந்த 12 ஹை ரிஸ்க் நபர்களுக்கு, 23 லோ ரிஸ்க் நபர்களையும் கண்டறிந்து சோதனை நடத்தியதில், கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. அவருடன் டெல்லியிருந்து மும்பைக்கு விமானத்தில் பயணத்தவருக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது” என்றார்

அதிகாரிகள் தகவலின்படி, 33 வயதான நபரிடம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனையில் நெகட்டிவ் ரிப்போட் வைத்துள்ளார். அவர் டெல்லியில் தரையிறங்கியதும் மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த ரிசல்ட் வருவதற்கு, மும்பை விமானத்தில் ஏறியுள்ளார். மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் பாசிட்டிவ் என ரிப்போட் வந்துள்ளது. ஆனால், அவர் பழைய நெகட்டிவ் சான்றிதழை காட்டி மும்பை விமான நிலையத்திலிருந்து வெளியேறினார். அங்கிருந்து டாக்சி மூலம் சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார் என கூறுகிறார்.

மேலும், வெள்ளிக்கிழமை இரவு லண்டனில் இருந்து அகமதாபாத்திற்கு வந்திறங்கிய 30 வயது NRI பெண் ஒருவருக்கு கோவிட் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என்றும், அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Delhi detects first case of omicron variant total tally in india now at

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com