மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய போராட்ட எதிர்ப்புக் குழு இன்று ‘பாரத் பந்த்’ போராட்டத்தை முன்னெடுத்து நடத்துகிறது. இந்த போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் 16 எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளது.
இந்நிலையில், டெல்லியின் போராட்டத்தில் ஈடுப்பட்டுளால் விவசாயிகள், பாரத் பந்த் காரணமாக எந்த கடைகளும் நிறுவனங்களும் வலுக்கட்டாயமாக மூடப்படாது என்று தெளிவுபடுத்தினர்.
"நாளை பிற்பகல் 3 மணி வரை முழுமையான ‘பாரத் பந்த்’ நடைபெறும் என்றும், அவசர /அத்தியாவசிய தேவை, மருத்துவ சேவைகள் அனுமதிக்கப்படும்”என்று கிசான் யூனியன் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்ற விவசாயிகளின் நிலைப்பாட்டை ராஜேவால் மீண்டும் வலியுறுத்தினார்,
இதற்கிடையே, ‘பாரத் பந்த்’ போராட்டத்தின் போது பாதுகாப்பு நெறிமுறைகளை கடுமையாக்கவும், அமைதி பேணப்படுவதை உறுதி செய்யவும் அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டுள்ளது. கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பின்பற்றப்பட வேண்டிய நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்றப்பற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கிடையே, லக்னோவில், இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ள நாடு தழுவிய ‘பாரத் பந்த்’ போராட்டத்தை ஆதரித்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை இன்று கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது அமைச்சரவை சகாக்களுடன், சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளை சந்தித்து பேசினார். சர்ச்சைக்குரிய மூன்று சட்டங்களுக்கு எதிரான 'பாரத் பந்த்' போராட்டத்திற்கு தனது ஆதரவையும் தெரிவித்தார்.
திமுக ஆதரவு:
பாரத் பந்த் முழு அடைப்பு போராட்டதிற்கு தமிழக விவசாய, வணிக அமைப்புகளுக்கு திமுக, கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் “வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டிச.,8-ஆம் தேதி, இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ள நாடு தழுவிய ‘பாரத் பந்த்’ முழு அடைப்பை வெற்றியடையச் செய்வோம்” தமிழக விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், சமூகநல அமைப்புகள், மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் அமோக ஆதரவளித்து, “பாரத் பந்த்”தை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.
”மாநில உரிமை எனும் வேட்டி உருவப்படுவதைக்கூட உணராமல் - உணர்ந்தாலும் உறைக்காமல் - அடிமை சேவகம் செய்யும் எடப்பாடி பழனிசாமி, வெட்கமின்றி தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்கிறார்” என்று மு. க ஸ்டாலின் இன்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பிரதமர் மோடி உரை:
ஆக்ரா மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியை தொடங்கிவைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, " தனித்தனியாக அல்லாமல், சீர்திருத்தங்கள் முழுவதுமாக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வு, சுமூகமான வாழ்வு, அதிகப்பட்ச முதலீடுகள், நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகிய நான்கு கட்டங்களாக நகரங்களின் வளர்ச்சிக்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
விவசாயிகள் வீதிக்கு வந்து போராட வேண்டும் : அண்ணா அசாரே
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நாட்டிலுள்ள ஓவ்வொரு விவசாயியும் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அண்ணா அசாரே கேட்டுக் கொண்டார். "இதுபோன்ற போராட்டங்கள் மீண்டும் மீண்டும் நடக்க கூடாது, பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க இது சரியான தருணம்" என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.