புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாய சங்கங்கள் தலைநகர் டெல்லியில் சுமார் 68 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தையில் விவசாய சங்கங்களுடன் ஈடுபட்டது. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிவுற்றது. இந்நிலையில் குடியரசு தின விழா அன்று டிராக்டர் பேரணி மூலம் சென்று தலைநகர் டெல்லியை முற்றுகையிட உள்ளோம் என்று சில விவசாய சங்கங்கள் கூறியிருந்தன. அதன் படி போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாய சங்கங்களும், டிராக்டர் மூலம் பேரணியாக சென்ற விவசாய சங்கங்களும், நேற்று டெல்லியில் உள்ள செங்கோட்டையை முற்றுகையிட்டனர்.
இந்த முற்றுகையின் போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாய சங்கங்களுக்கும், அங்கு நின்று கொண்டிருந்த போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனவே போலீசார் தடியடி மூலமும், கண்ணீர் புகை குண்டுகள் மூலமும் விவசாயிகளை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அதோடு டிராக்டரில் பேரணியாக வந்தவர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தினர். போலீசாரின் தடியடியில் இருந்து தப்பித்து செல்ல முயற்சித்த ஒரு டிராக்டர் அங்கிருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் நவ்ரீத் சிங் (27) எனும் இளைஞர் சம்பவ இடத்திலே இறந்தார். போராட்டத்தின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தில் போலீசார் சிலருக்கும், விவசாயிகள் பலருக்கும் காயம் ஏற்பட்டது.
போராட்டத்தின் போது உயிரிழந்த இளைஞர் ஆஸ்திரேலியாவில் படித்து கொண்டு இருந்தவர். அவருக்கும் உடன் படிக்கும் சக மாணவிக்கும் ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது . இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு தான் போராட்ட களத்திற்கே வந்துள்ளார். மற்றும் அவர் போராட்டத்தில் கலந்து கொண்டது பற்றி அவரது குடும்பத்தினருக்கே தெரியாது என்று கூறப்படுகின்றது.
“விவசாயிகள் சிலர் டிராக்டரை வேகமாக ஓடிவந்து எங்கள் மீது மோத முயற்சி செய்தார்கள். நாங்கள் அவர்களை சமாளித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் அந்த இளைஞர் வந்த டிராக்டர் தடுப்பின் மீது மோதி கீழே கவிழ்ந்தது. போலீசார் சிலர் உதவி செய்ய முயன்றார்கள். ஆனால் அங்கிருந்த விவசாயிகள் போலீசாரை தடுத்தார்கள். அதோடு நேற்று மாலை வரை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல போலீசாரை அவர்கள் அனுமதிக்கவில்லை” என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இதை மனிதேவ் சதுர்வேதி எனும் இளைஞர் முற்றிலும் மறுத்து பின்னவருமாறு கூறுகின்றார். “டிராக்டர் ஓட்டி வந்த நவ்ரீத் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளைக் கொண்டு தாக்கினர். அதில் ஒரு குண்டு அவர் மீது பட்டதால் தான் அவரால் டிராக்டரை கன்ட்ரோல் செய்ய முடியாமல் கவிழ்ந்தது. அங்கிருந்த காவலர்கள் யாரும் உதவிக்கு கூட வரவில்லை” என்று கூறுகின்றார்.
“தன்னுடைய மகன் போராட்டத்தின் போது இறந்து விட்டதாக அங்கிருந்த சில விவசாயிகள் தகவல் அளித்ததாக” உயிரிழந்த நவ்ரீத் சிங்கின் தந்தை சஹாப் சிங் கூறினார்
‘இது குறித்து விசாரித்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ராம்பூர் மாவட்ட நீதிபதி அஞ்சநேய குமார் சிங் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil