டில்லியில் ஜான்சி ராணி சாலையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
டில்லியின் ராணி ஜான்சி சாலை, அனாஜ் மார்க்கெட் பகுதியில் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு, அதிகாலை 5.22 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்திற்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் 43 பேர் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 30 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
டில்லியின் மத்திய பகுதியில் உள்ள ஜான்சி சாலையில், அனூஜ் மார்க்கெட்டில், மக்கள் அதிகம் கூடும் பகுதியில், சூட்கேஸ்கள் , டிராவல் பேக்குகள் மற்றும் அதன் உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்படுகிறது. இந்த பகுதி, குறுகியதாகவும், நெரிசல் மிகுந்ததாகவும் இருந்தது.
இந்நிலையில், இன்று(டிச.,8) அதிகாலை 5 மணியளவில், பை தயாரிக்கும் பிரிவில் தீவிபத்து ஏற்பட்டு, மற்ற பகுதிகளுக்கும் பரவியது. தீ எப்படி பிடித்தது என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. இந்த சம்பவத்தில், 43 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் என்பதும், அவர்கள் பணி முடித்து தூங்கி கொண்டிருந்ததும், தீ காரணமாக உண்டான புகையை சுவாசித்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், காலை நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. அந்த கட்டடத்தில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. இதனால், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.தீவிபத்தில் படுகாயமடைந்து, டில்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மற்ற சிலர் காயங்களுடன், ஆர்எம்எல் மருத்துவமனை மற்றும் ஹிந்து ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
10 லட்சம் நிவாரணம் : இந்த தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் டில்லி அரசு சார்பில் அளிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மோடி, அமித் ஷா, ராகுல் இரங்கல் : டில்லி தீவிபத்து சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு மாநில முதல்வர்கள் இரங்கல் : மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி , பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பேரிடர் படையினர் விரைவு : தீவிபத்து சம்பவம் நிகழ்ந்த இடத்தில், பேரிடர் மீட்பு குழுவினர் உதவியோடு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவு : தீவிபத்து சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி 7 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.