டெல்லி புதிய முதல்வர் அறிவிப்பு: டெல்லியின் நான்காவது பெண் முதல்வராக ரேகா குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் முதன்முறையாக எம்.ல்.ஏ-வாக வெற்றிபெற்றுள்ளார். இவர், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் மாணவர் அணியிலும் அங்கம் வகித்துள்ளார். 50 வயதான இவர், ஆம் ஆத்மி கட்சியின் அதிஷியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Delhi gets its fourth woman CM: Who is Rekha Gupta?
ரேகா குப்தா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தனது எக்ஸ் தளத்தில் முதல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பா.ஜ.க-விற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
1996-97 ஆகிய ஆண்டுகளில் டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கர் தலைவராக ரேகா குப்தா பதவி வகித்துள்ளார். பின்னர், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் டெல்லி பிரிவின் செயலாளராகவும், அந்த அமைப்பின் தேசிய செயலாளராகவும் அவர் பணியாற்றினார்.
வழக்கறிஞரான இவர், 2007-ஆம் ஆண்டு தேர்தல் அரசியலில் களமிறங்கினார். அப்போது, வடக்கு பிடம்புரா வார்டில் இருந்து அவர் வெற்றிபெற்றார். 2012 ஆம் ஆண்டு அதே வார்டிலும், 2022-ஆம் ஆண்டு ஷாலிமார் பாக் வார்டிலும் அவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. டெல்லி பா.ஜ.க-வின் மகிளா மோர்ச்சாவின் பொதுச் செயலாளராகவும், பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினராகவும் ரேகா குப்தா பணியாற்றியுள்ளார்.
ஒரு கவுன்சிலராக, குப்தா தனது பகுதியில் நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நூலகங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் போன்ற வசதிகளை அமைத்தார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார பரிசோதனை முகாம்களை அவர் தொடங்கினார். இதேபோல், குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் அவர் முன்னெடுத்ததாக கூறப்படுகிறது.
அவர், ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய்க்கு எதிராக மேயர் தேர்தலில் பா.ஜ.க-வின் தேர்வாக இருந்தார். ஆனால், அதில் தோல்வியை தழுவினார். சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்த பந்தனா குமாரியை, அவர் தோற்கடித்தார்.
சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரமாணப் பத்திரத்தில் குப்தா தனது சொத்து மதிப்பு ரூ.3.5 கோடி என்று குறிப்பிட்டிருந்தார்.